சிஏ தேர்வு தேதி மாற்றம் pt web
இந்தியா

சிஏ தேர்வு நடைபெற இருந்த தேதி மாற்றம்... பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு கட்சித்தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

தமிழ்நாட்டு மக்களின் திருவிழாவான பொங்கல் அன்று வணிகச்சட்டங்கள் தேர்வும், உழவர் திருநாள் அன்று திறனாய்வு என்று கூறப்படும் Quantitative Aptitude தேர்வும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார். பல்வேறு தரப்பினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் பொங்கல் அன்று நடைபெறும் தேர்வை மாற்ற வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போன்றோரும் கோரிக்கை வைத்தனர்.

நாடாளுமன்றத்திலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது பொங்கலன்று நடைபெறுவதாக இருந்த சிஏ தேர்வுகள் ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம்

ஜனவரி-2025ல் நடைபெறும் பட்டயக் கணக்காளர்கள் இடைநிலைத் தேர்வின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. எவ்வாறாயினும், www.ical.org இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட செப்டம்பர் 20-2024 தேதியிட்ட முக்கிய அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட பிற விவரங்கள் / விவரங்கள் மாறாமல் இருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்கூறியவற்றைக் குறித்துக்கொள்ளவும் மற்றும் நிறுவனத்தின் இணையதளமான www.ical.org உடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.