திருவள்ளூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை – அரசுப்பள்ளி தலைமையாசிரியர் போக்சோவில் கைது
செய்தியாளர்: நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் திருத்தணி ஒன்றியம் தாடூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (57) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவி பெற்றோரிடம் இதை தெரிவித்த நிலையில், அவர்கள் குறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) மலர், காவல் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி ஆகியோர் தலைமையாசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.