பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ் ANI
இந்தியா

பிரியங்காவின் தேர்தல் வெற்றி.. வழக்கு தொடுத்த பாஜக வேட்பாளர்!

பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Prakash J

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்குகிறது கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி. இந்தத் தொகுதியின் எம்பியாக வெற்றிபெற்ற ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ததால், நவம்பர் 13இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து காங்கிரஸின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் களமிறக்கப்பட்டார். இந்தத் தேர்தலில், பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜக சாா்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரியும் தோல்வியைத் தழுவினர். இந்த நிலையில், பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரியங்கா காந்தி

அந்த மனுவில், ’காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேராவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நேற்று தேர்தல் மனு தாக்கல் செய்தோம். வேட்பு மனுக்கள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களில் காந்தி வத்ரா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் போன்ற பல முக்கிய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தோம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 23 முதல் ஜனவரி 5 வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி, ”வெறும் விளம்பரத்துக்காகவே இத்தகைய நடவடிக்கையில் பாஜக வேட்பாளர் ஈடுபட்டுள்ளார். இந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நவ்யா ஹரிதாஸுக்கு அபராதமும் விதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி

இதுகுறித்து மாணிக்கம் தாகூர், ”மனு தாக்கல் செய்ய பா.ஜ.கவுக்கு உரிமை இருந்தாலும், உண்மை எங்கள் பக்கம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா தனது வேட்பு மனுவில், 12 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.