பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகம் அடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பரப்புரை களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையை தொடங்கினார். சமஸ்திபூருக்கு சென்ற பிரதமருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா விருது வென்றவருமான கர்ப்பூரி தாக்கூரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அரசியலமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்ததோடு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் போது பிகாருக்கு வழங்கப்பட்ட நிதியை விட, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி பிகாருக்கு 3 மடங்கு நிதியை வழங்கியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சஹர்சா பகுதியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், குஜராத் மாநிலத்தில் பல்வேறு ஆலைகளை நிறுவிய பிரதமர் மோடி, பிகாரில் வெற்றிபெற வேண்டும் என நினைப்பதாகவும், ஆனால் இங்கு அது நடக்காது என்றும் குறிப்பிட்டார். தாங்கள் பிகாரிகள் என்றும், எதற்கும் அச்சப்படமாட்டோம் எனவும் கூறினார். முகேஷ் சஹானி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என கூறிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக அவர் ஒலிப்பார் என்றும் தெரிவித்தார். பிற சமூகங்களை சேர்ந்தவர்களையும் துணை முதல்வர்களாக நியமிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் கூறினார்.