🖊️ சமஸ்
பிஹார் தேர்தலையொட்டி அங்கு சென்றுள்ள புதிய தலைமுறை குழுவினர், அங்குள்ள அரசியல் தலைவர்களின் பரப்புரைகளை கவனிப்பதோடு, பல்வேறு தரப்பு மக்களுடனும் உரையாடி வருகின்றனர். இத்தகு சூழலில், 2025 பிஹார் தேர்தல் இந்திய நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்வதாகக் கூறுகிறார் ஆசிரியர் சமஸ்.
பிஹார் 2025 தேர்தல் பிரச்சாரத்தைக் கூர்ந்து கவனிக்கும்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க முடிகிறது. அது என்னவென்றால், சாமானிய மக்களுடைய எழுச்சி குரல். பொதுவாகவே சாதிக் கணக்குகள் பெரிய ஆதிக்கம் செலுத்தும் களம் பிஹார் அரசியல் களம். போதாக்குறைக்கு அவ்வப்போது அண்டை மாநிலங்களில் விசுவரூபம் எடுக்கும் மத அரசியலும் அவ்வப்போது பிஹார் அரசியலை ஆட்டிப் படைக்கும். ஆனால், பிஹார் தேர்தல் களத்தை தொடர்ந்து கவனித்து வருபவன் என்கிற வகையில் ஒரு பெரிய மாற்றத்தை இந்தத் தேர்தலில் பார்க்கிறேன். அது என்னவென்றால், சாதி மதக் கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, “அதெல்லாம் இருக்கட்டும்! நான் உனக்கு ஓட்டு போட்டால் எங்கள் தரப்புக்கு என்ன கிடைக்கும்?” என்று மக்கள் வெளிப்படையாக வளர்ச்சித் திட்டங்களைக் கேட்கக் கூடிய சூழலை பார்க்க முடிகிறது.
மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை இனியும் ‘ரேவடி பாலிடிக்ஸ்’ என்றோ ‘இலவச கவர்ச்சி அரசியல்’ என்றோ கொச்சைப்படுத்த முடியாது என்பதை இந்த பிஹார் தேர்தல் திட்டவட்டமாக சொல்கிறது.
2025 தேர்தலை ஒட்டி சென்ற வாரங்களில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிரதான எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் நாடு முழுவதும் பேசுபொருள் ஆனதைப் பார்த்தோம். பலர் அதைக் கேலியாகவும்கூட விமர்சித்ததையும் பார்த்தோம். ஆனால், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை இனியும் ‘ரேவடி பாலிடிக்ஸ்’ என்றோ ‘இலவச கவர்ச்சி அரசியல்’ என்றோ கொச்சைப்படுத்த முடியாது என்பதை இந்த பிஹார் தேர்தல் திட்டவட்டமாக சொல்கிறது.
பிஹார் வந்ததிலிருந்து நான் சந்திக்கும் மக்கள் மத்தியிலும் சரி; கேட்கும் பிரச்சாரங்களிலும் சரி; “பிஹாருக்கு என்ன வேண்டும்?” அல்லது “பிஹாருக்கு என்ன செய்வோம்?” என்ற குரல்களையே கேட்க முடிகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் செய்த பணிகளையே பாஜக திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்தது.
2014 தொடங்கி 2025 வரை பிஹாருக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதி வந்து சேர்ந்திருக்கிறது என்று பேசினார் அமித் ஷா. பிஹாருக்கான மோடி அரசின் சென்ற ஒன்றைரை ஆண்டு ஒதுக்கீடாக மட்டும், 2024-25 மத்திய பட்ஜெட்டில் ரூ.58, 900 கோடி அறிவிக்கப்பட்டது; 2025-26 மத்திய பட்ஜெட்டில் புதிய விமான நிலையங்கள், பாட்னா விமான நிலைய விரிவாக்கம், மேற்கு கோசி கால்வாய் நீட்டிப்புத் திட்டம், ஐஐடி பாட்னா விரிவாக்கத் திட்டம், தேசிய உணவு தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத் திட்டம் உள்ளிட்ட பல பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதைத் திரும்பத் திரும்ப பேசினர் பாஜக தலைவர்கள். இதையன்றி முதல்வர் நிதிஷ் குமார் தான் கொண்டுவந்த திட்டங்கள், பணிகள் எல்லாவற்றையும் பேசினார்.
பிஹாருக்கான போக்குவரத்தில் மட்டுமே மோடி அரசு எவ்வளவு கவனம் கொடுத்துள்ளது என்று பேசினர் பாஜகவினர். மோடி ஆட்சியின் 11 ஆண்டுகளில் 1,899 கிமீ அளவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்ற ஒன்றரை ஆண்டில் மட்டும் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 20 வந்தே பாரத் ரயில்கள், 10 அம்ரித் பாரத் ரயில்கள் பிஹாருக்கு விடப்பட்டுள்ளன. சாலை திட்டங்களுக்கு மட்டும் ரூ.33,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் வெவ்வேறு வார்த்தைகளில் பேசினார்கள்.
இது தவிர, நிதிஷ் சென்ற 20 ஆண்டுகளில் பிஹாருக்கு தான் செய்த பணிகளைப் பேசினார். கடைசியாக, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு அவர் கொண்டுவந்த மகளிருக்கான முதல்வரின் திட்டத்தைப் பேசினார். தலா 10,000 ரூபாயை 25 லட்சம் பெண்களுக்கு தொழிலுதவிக்காக தரும் திட்டம் அது.
பிஹார் மக்கள் அசரவே இல்லை. “செய்ததெல்லாம் சரி… அடுத்து என்ன செய்வீர்கள்?” என்ற குரலே களத்திலிருந்து கேட்டது. அதன் விளைவாகவே தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை இல்லாத ஆச்சரியம் நடந்தது. தேஜஸ்வி - ராகுல் கூட்டணியான இந்தியா கூட்டணி திகைக்க வைக்கும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. “குடும்பத்தில் ஒருவருக்கு என்று ஒரு கோடி பேருக்கு அரசுப் பணி; இது தொடர்பாக ஆட்சிக்கு வந்த அடுத்த 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும்” என்றது. “வீட்டுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்; பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை; கணவரை இழந்த பெண்கள், மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, கள் இறக்குதல், விற்பனைக்கு அனுமதி” என்பன உள்பட பல முக்கியமான வாக்குறுதிகளை வெளியிட்டது.
மோடி - நிதிஷ் கூட்டணியான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இது ஒரு நெருக்கடியைத் தந்தது. எதிரணிக்கு பதிலடியாக அது தன் அறிக்கையைத் தயாரித்தது. “பிஹாரில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் 125 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்றது. “பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்; விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 3,000 உதவித்தொகை வழங்கப்படும்; பாட்னாவைத் தவிர மேலும், நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்; பிஹாரில் 10 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்; பிஹாரின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும்….” என்றது. இப்படி பல அறிவிப்புகளை வெளியிட்டது.
சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு, தாராளமயமாக்கல் கொள்கையை முழுமையாக வரித்துக்கொண்டு கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் செல்வத்தில் என்னுடைய பங்கு என்ன என்று ஒவ்வொரு குடிநபரும் கேள்வி கேட்கும் சூழல் இன்று எழுந்திருக்கிறது.
இரு அறிக்கைகளிலும் எவ்வளவோ இன்றைய சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகள் இருக்கலாம். உடனேவோ, முழுமையாகவோ நிறைவேற்ற முடியாத கற்பனைகள் இருக்கலாம். ஆனால், பிஹார் சமூகத்தில் சாமானிய மக்களிடம் பிரதிபலிக்கும் எண்ணங்களை இந்தத் தேர்தல் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு, தாராளமயமாக்கல் கொள்கையை முழுமையாக வரித்துக்கொண்டு கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், நாட்டின் வளர்ச்சியில், நாட்டின் செல்வத்தில் என்னுடைய பங்கு என்ன என்று ஒவ்வொரு குடிநபரும் கேள்வி கேட்கும் சூழல் இன்று எழுந்திருக்கிறது. தனிக்கட்சி காலம் போய், கூட்டணி ஆட்சியே யதார்த்தம் என்றாகிவிட்டிருக்கும் சூழலில், என்னுடைய மாநிலத்துக்கும், ஊருக்கும் கிடைத்திருப்பது என்ன என்ற கேள்வியை மிக சகஜமாக கேட்க முடிகிறது.
ஆட்சியாளர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் வாக்காளர்கள் ஆக்கபூர்வமான பேரம் பேசும் துடிப்பான அரங்கமாக இந்திய தேர்தல் களம் மாறிவருவது ஜனநாயக மயமாக்கலைக் குறிக்கிறது. இந்தியாவின் வரலாற்றில் எளிய மக்கள் மிக வலுவாக தங்கள் குரலை உயர்த்துவதை இங்கே பார்க்க முடிகிறது.
ஒட்டுமொத்த வளர்ச்சி என்றெல்லாம் இனி யாரும் படம் காட்ட முடியாது. என்னுடைய பங்கு என்ன என்று ஒரு விவசாயி, ஒரு மாணவர், படித்து முடித்த ஒரு இளைஞர், பெண், முதியவர் என்று பல தரப்பினரும் தமக்கான பங்கை கேட்பதைப் பார்க்க முடிகிறது. அரசியல் தலைவர்களின் சாதி - மதக் கணக்குகளுக்கு வெளியிலும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும்; தேர்தல் நாளில் மக்கள் கணக்கு தீர்ப்பார்கள் எனும் பதற்றத்தை அரசியல் தலைவர்களின் பேச்சில் பார்க்க முடிகிறது. பிஹாரில் மாறிக்கொண்டிருக்கும் இந்தக் குரல் இந்திய ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் மிக முக்கியமான ஒரு சேதி! நாடு முழுக்க நாம் விரைவில் இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்!