பிகாரில் நாளை 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.69% சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பிகாரில் நாளை (நவ.11) 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தல், பீகாரில் எஞ்சியுள்ள 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில், 136 பெண் வேட்பாளர்கள் அடக்கம். இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
3 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எல்லை மண்டலங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவும், இரட்டை ரோந்துப் பணியை மேற்கொள்ளவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிஹார் - நேபாள எல்லை 72 மணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது. இந்திய - நேபாள எல்லையில் மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், சீதாமர்ஹி, ஷியோஹர், மதுபனி, அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான மற்றும் நியாயமான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 1,650 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக, ஆர்ஜேடி மற்றும் ஜன் சுராஜ் ஆகிய கட்சிகள் முக்கியமான தொகுதிகளில் மோதுவதால், கதிஹார், பெட்டியா மற்றும் ஜமுய் போன்ற இடங்களில் கடுமையான போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ஒரு முக்கிய எல்லைத் தொகுதி. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறை, முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவி, தக்க வைத்துக் கொள்வார் என நம்பப்படுகிறது. எனினும், எல்லை தாண்டிய இடம்பெயர்வு போன்ற பிரச்னைகளால் அவருக்கு இது ஒரு சோதனையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் சார்பில் வாசி அகமதுவும், உள்ளூர் ஓபிசி தலைவர் ரோஹித் சிகாரியா சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். சிகாரியாவின் வாக்கு காங்கிரஸுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.
2005 முதல் கதிஹார் தொகுதியை வகித்து வரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தர்கிஷோர் பிரசாத், தனது நீண்டகால உதவியாளர் அசோக் அகர்வாலின் மகனான விகாஷீல் இன்சான் கட்சியின் சவுரப் அகர்வாலை எதிர்கொள்கிறார். ஜன் சுராஜின் பிரசாந்த் கிஷோர், காஜி ஷாரிக்கை களமிறக்கியுள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசாந்த் கிஷோரின் கட்சி சிறப்பாக செயல்பட்டால், மகா கூட்டணி வாக்குகள் பிளவுபட்டு பாஜகவுக்கு சாதகமாக அமையும். முஸ்லிம், யாதவ் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்குகள் இங்கு அதிகம்.
மாநில தொழில்துறை அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நிதிஷ் மிஸ்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியை 41,700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். என்றாலும், மிஸ்ரா தற்போது மீண்டும் மகாகத்பந்தன் கூட்டணியில் உள்ள சிபிஐயின் ராம் நாராயண் யாதவை எதிர்கொள்வதால் இது அவருக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 'உயர்' சாதியினரும் யாதவர்களும் இங்கு மக்கள்தொகையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பட்டியல் சாதியினரும் குறிப்பிட்ட அளவில் இடம்வகிக்கின்றனர்.
இத்தொகுதி, அதன் பன்முக அரசியல் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருகாலத்தில் இடதுசாரி தீவிரவாதத்தின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, கட்சி விசுவாசத்தில் வரலாற்று மாற்றங்களைக் கண்டுள்ளது. 2020 தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகளும், ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீராங்கனையுமான பாஜக வேட்பாளர் ஷ்ரேயாசி சிங், ஆர்ஜேடியின் விஜய் பிரகாஷ் யாதவை எதிர்த்து ஒரு தீர்க்கமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது கவனம் ஈர்த்தது. இந்த முறை, மும்முனைப் போட்டியில் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவர் இலக்கு வைத்துள்ளார். அவரை எதிர்த்து ஆர்.ஜே.டி. சார்பில் ஷம்ஷாத் ஆலமும், ஜன் சுராஜ் சார்பில் அனில் பிரசாத் சாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பொதுப் பிரிவு தொகுதியான இது, பாஜகவுக்கு வலுவான தொகுதியாக இருந்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய சட்ட அமைச்சருமான பிரமோத் குமார், 2005 முதல் இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். கிராமப்புற தொகுதியான இதில், ஆர்ஜேடியின் பிரமோத் குமாருக்கும் தேவா குப்தாவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.