ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் PTI
இந்தியா

”ஹோலியன்று முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்” - பீகார் பாஜக எம்.எல்.ஏ!

புனித ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை வரும் ஹோலி பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

புனித ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை வரும் ஹோலி பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பீகாரைச் சேர்ந்த மதுபனி மாவட்டத்தில் உள்ள பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல்

இதுகுறித்து அவர், “முஸ்லீம் மக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் தொழுகை நடத்துவதற்கு ஓர் ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆனால் ஹோலி இதில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமைதான் வருகிறது. எனவே இந்துக்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். முஸ்லீம்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக் கூடாது. அவர்களுக்கு இது பிரச்னையாக இருந்தால், அன்றைய தினம் வீட்டிற்குள்ளேயே இருந்துகொள்ள வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அவர்கள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். வண்ணப் பொடிகள் விற்பனை செய்யும் கடைகளை அமைப்பதன் மூலம் பணம் சம்பாதிப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அந்த வண்ணப்பொடி தங்கள் துணிகளில் பட்டால் நரகத்திற்குச் செல்வதுபோல் அவர்கள் உணர்கின்றனர்” எனப் பேசியுள்ளார்.

இவருடைய கருத்துக்கு ஆர்ஜேடி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான இஸ்ரேல் மன்சூரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், “பண்டிகைகள் என்று வரும்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் இப்தார் விருந்துகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம்களைப் பற்றி பாஜக எம்எல்ஏ ஏன் கவலைப்படுகிறார்? இவர்கள் அரசியலுக்காக வகுப்புவாத பிரச்னையைத் தூண்டிவிட்டு, சனாதனக் கட்சியின் கொடி ஏந்தியவர்கள்போல் நடிக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல்

இவ்விவகாரம் குறித்து மாநில சிறுபான்மை விவகார அமைச்சரும் ஜே.டி.(யு) தலைவருமான ஜமா கான், "எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் ஏற்படாது. பண்டிகைக் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, ஹோலியின் வண்ணங்களைப் பார்த்து யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அன்று வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச சம்பல் வட்ட அதிகாரி (CO) அனுஜ் சவுத்ரி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.