ஹோலி மற்றும் தொழுகை குறித்து சர்ச்சை பேச்சு.. உ.பி. போலீஸுக்கு வலுக்கும் கண்டனம்!
இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் அவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாகத் தொடங்கி, சூரிய மறைவு வரை உண்ணாமல், பருகாமல், குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், தவறான எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நோன்பு இருப்பர். இந்த நிலையில், புனித ரம்ஜான் மாதத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் இணைந்து வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப்பிரதேசம் சம்பல் கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று அமைதிக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, சம்பல் வட்ட அதிகாரி (CO) அனுஜ் சவுத்ரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகை. அதேசமயம் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களைப் பார்த்து யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அன்று வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். பண்டிகைகள் ஒன்றாகக் கொண்டாடப்படுவதால், வெளியே வருபவர்கள் பரந்த மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க சமூக நல்லிணக்கமும் கடுமையான கண்காணிப்பும் அவசியம். இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும்.
பங்கேற்க விரும்பாதவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஈத் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதுபோல, இந்துக்கள் ஹோலி பண்டிகையை எதிர்நோக்குகிறார்கள். மக்கள் வண்ணங்களைப் பூசியும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும், மகிழ்ச்சியைப் பரப்பியும் கொண்டாடுகிறார்கள். அதேபோல், ஈத் பண்டிகையன்று, மக்கள் சிறப்பு உணவுகளைத் தயாரித்து, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார்கள். இரண்டு பண்டிகைகளின் சாராம்சம் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையாகும். இது, இரு சமூகங்களுக்கும் பொருந்தும். யாராவது நிறத்தை விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது” எனத் தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், “முதலமைச்சரின் நற்பெயர் நிலைத்திருக்க, அதிகாரிகள் அவரிடமிருந்து கேட்பதைப் பின்பற்றுகிறார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மற்றும் வெளிப்படையாக தங்கள் சார்பை வெளிப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது கண்டிக்கத்தக்கது, மேலும் அதிகாரிகள் பாஜக முகவர்களாக செயல்படக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
எஉத்தரப்பிரதேச காங்கிரஸ் ஊடகக் குழுவின் துணைத் தலைவர் மணீஷ் ஹிந்த்வி, "ஒரு அதிகாரி, அவர்கள் யாராக இருந்தாலும், மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும்; அப்போதுதான் இந்த நாட்டில் ஆட்சி முறையாகச் செயல்பட முடியும். இல்லையெனில், அது அராஜகத்திற்கு வழிவகுக்கும். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் வண்ணங்களுடன் விளையாடுவதில் அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருந்தால், பயம் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே அந்த அதிகாரியின் கடமையாகும். ஹோலி பண்டிகையை கொண்டாடி, தொழுகையை அமைதியாக நிறைவேற்றும் ஏற்பாடும் இருக்க வேண்டும்.
ஹோலி வருடத்திற்கு ஒரு முறை வரும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகை 52 முறை நடக்கும் என்றும், வண்ணங்களை விரும்பாதவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் கூறுவது ஒரு அரசியல் கூற்று. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். ஒரு அதிகாரியாக, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது; இல்லையெனில், நாளை அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பை அல்ல, இந்துக்களின் பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்வோம் என்று கூறக்கூடும். இந்த காவல்துறை அதிகாரியின் அறிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளின் நடத்தை விதிகளின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.