தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணி pt web
இந்தியா

பிகார் தேர்தல்| காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் குழப்பம்.. அனைத்திலும் வேகம் காட்டும் பாஜக+?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியில் குழப்பமே நிலவி வருகிறது.

PT WEB

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்தில், அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிகார் மட்டுமின்றி, நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இத்தேர்தலில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளடக்கிய மகா கட்பந்தன் கூட்டணியும் பிகார் 2025 தேர்தலில் நேரடிப் போட்டியில் இருக்கின்றன.

பிகார்

எண்டிஏ கூட்டணி தொகுதி உடன்பாடு உறுதி!

இதற்கிடையே தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், இரு கூட்டணிகளும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வெற்றிகரமாக நடந்திருப்பதாக அக்கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஆண்டுத் தேர்தலில் 110 இடங்களில் நின்று 74 இடங்களில் வென்ற பாஜகவுக்கு இந்த முறை101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த தேர்தலில், 115 இடங்களில் நின்று 43 இடங்களில் வெற்றிப் பெற்ற ஐக்கிய ஜனதா தளமும் 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்தமுறை ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடவுள்ளன. மேலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டிருந்த நிலையில், தற்போது 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 6 தொகுதிகள், இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி

மகா கட்பந்தன் கூட்டணியில் நிலவும் குழப்பம்

இவ்வாறு, தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்தான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியிலேயே இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி பிகார் தேர்தலில் போட்டியிட 60 தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், 52 முதல் 55 தொகுதிகள் வரை தயாராக இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இடது சாரி கட்சிகள் அதிருப்தி!

மகா கட்பந்தன் கூட்டணியில் உள்ள மற்ற இடதுசாரி கட்சிகளும் போதுமான இடங்களை ஒதுக்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) கடந்த தேர்தலில் மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்து, 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளை வென்றிருந்தது. அதிக வெற்றி விகிதம் கொண்ட கட்சியாகவும் சிபிஐ (எம்.எல்) இருக்கிறது. இந்நிலையில், முன்பு போட்டியிட்ட அதே 19 இடங்களை தர ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி முடிவு செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த சிபிஐ (எம்.எல்) தரப்பில் இருந்து, 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. தொடர்ந்து, கட்சியின் சுயமரியாதையை சமரசம் செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது.

சிபிஐ (எம்.எல்) பொதுச்செயலாளர் தீபன்கர் பட்டாச்சார்யா

கடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கேட்கும் 60 தொகுதிகளை தரத் தயங்குகிறார் தேஜஸ்வி யாதவ். இவ்வாறு தொகுதிப் பங்கீடுகள் குறித்து மகாகட்பந்தன் கூட்டணியில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பிரச்னையும் இருக்கிறது.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதிலும் குழப்பம்

அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மகாகட்பந்தன் கூட்டணியில் அதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம் தேர்தல் பணியை தொடங்கி இருக்கும் நிலையில், அந்த கூட்டணி சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தொடர்ந்து, சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி உதித்ராஜிடம் ”முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்தானா” என்ற கேள்விக்கு அவர், ”ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வேண்டுமானால் முதல்வர் வேட்பாளராக இருக்கலாம். இண்டியா கூட்டணிக்கு இன்னும் முடிவு செய்யவில்லை” எனக் கூறியிருந்தார். இவ்வாறு முதல்வர் வேட்பாளர் தேர்விலும் மகா கட்பந்தன் கூட்டணியிலும் குழப்பமே நிலவி வருகிறது.

தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியால் ஒருமித்த கருத்துக்கு இன்னும் வரமுடியவில்லை. இந்நிலையில், புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருப்பதால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஓரிரண்டு நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு குறித்து உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், ஜன்சுவராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார். AIMIM கட்சியில் அலாவுதீன் ஓவைசி 32 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இது மேலும் சிக்கலான சூழ்நிலையை மகாகட்பந்தன் கூட்டணிக்கு உருவாக்கியிருக்கிறது. இப்படி இருக்கையில், மகாகட்பந்தன் கூட்டணி தொகுதிப் பங்கீடே செய்யாமல் காலம் தாழ்த்துவது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.