விஜய், சிரஞ்சீவி pt web
இந்தியா

விஜய்க்கு கூடியதை விட பெரிய கூட்டம்.. அரசியலில் சிரஞ்சீவி ஏன் காணாமல் போனார்?

விஜய்க்கு கூடியதை விட பெரிய கூட்டம் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு கூடியதாகவும், கடைசியில் அவரது கட்சியே காணாமல் போய்விட்டதாகவும் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் விமர்சித்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

PT WEB

தவெக தலைவர் விஜய்க்கு கூடியதை விட பெரிய கூட்டம் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு கூடியதாகவும், கடைசியில் அவரது கட்சியே காணாமல் போய்விட்டதாகவும் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் விமர்சித்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. யார் அந்த சிரஞ்சீவி, அவரது கட்சிக்கு என்ன ஆனது? என சலிக்கத் தொடங்கிவிட்டனர் விஜயின் இளம்படையினர்.

chiranjeevi

சிரஞ்சீவி சாதாரண நடிகரல்ல; தெலுங்கு சூப்பர் ஸ்டார். 1992-இல் அமிதாப்பச்சனைவிட அதிக சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்று ‘தி வீக்’ பத்திரிகை தலைப்பிடும் அளவுக்கு அவர் புகழ் பெற்றிருந்தார். அவரது நடன அசைவுகளும், யதார்த்தமான சண்டைக் காட்சிகளும் தெலுங்கு சினிமாவின் போக்கையே மாற்றின. ரசிகர்களைத் தன் பக்கம் கட்டி வைத்திருந்தார் அவர்.

திரையில் பெற்ற இந்த அசுர வெற்றியை, அரசியல் களத்திலும் அடைய முடியும் என சிரஞ்சீவி நம்பினார். 2008-ஆம் ஆண்டு, திருப்பதியில் ரசிகர்களைத் திரட்டி, ‘பிரஜா ராஜ்யம்’ கட்சியைத் தொடங்கினார். சுமார் 10 லட்சம் ரசிகர்கள் திரண்ட அந்தப் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆந்திர அரசியல் வட்டாரமே சற்று ஆடி போனது. ‘என்.டி.ஆர் போல இவரும் முதல்வர் நாற்காலியில் அமர்வார்’ என்று அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறினர்.

ஆந்திராவில் மூன்றாவது பெரும்பான்மையினரான காபு சமூகத்தினரின் ஆதரவும் சிரஞ்சீவிக்கு இருக்கும் என கருதப்பட்டது. குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் காபு சமூகத்தினர் உள்ளனர். ஆனால், அவர்களது வாக்குகள் முழுமையாகக் கிடைக்காமல் போனது. 2009-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், சினிமா வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தின. பிரம்மாண்டமாகத் தொடங்கிய சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி, வெறும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில், திருப்பதியில் மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது.

அதன் பிறகு, அவரது அரசியல் செயல்பாடும் குறைந்து போய், ஒருகட்டத்தில் ‘பிரஜா ராஜ்யம்’ கட்சி காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது. அதன் மூலம் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் எனும் பதவி கிடைத்தாலும், சிரஞ்சீவியால் அரசியலில் பெரியதாக்கத்தை ஏற்படுத்த முடியாமலேயே போனது.

பவன் கல்யாண்

சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண்,  ‘ஜன சேனா’ கட்சியை தொடங்கி, ஆந்திராவில் துணை முதல்வராக இருக்கிறார். “அவருக்குமே கூட இதுதான் உச்சபட்ச பதவி. இதைத்தாண்டி அவரால் வளர முடியாது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சினிமாவில் ஒரு ஹீரோவுக்கான அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால், அரசியலில் ஒருதலைவருக்கான அங்கீகாரம் மக்களின் இதயத்தில் இருந்து வர வேண்டும். அதுவெறுமனே பிரம்மாண்டமான கூட்டங்களால் அல்ல, ஆக்கபூர்வமான திட்டங்களாலும், களப்பணியாலும் மட்டுமே சாத்தியம் என்று சிரஞ்சீவியின் அரசியல் பயணத்துடன் விஜயின் அரசியல் பயணத்தை விமர்சகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

சிரஞ்சீவி மீண்டும் திரைத் துறைக்கு திரும்பினாலும், அவர் கடந்துவந்த அரசியல் பாதை, ஒரு கலைஞனின் புகழும், மக்களின் அரசியல் தேர்வும் வெவ்வேறானவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.