ஹீரோவாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்... ரஜினிகாந்த் மகள் திரைப்படம்..?
அபிஷன் ஜீவிந்த் இயக்கிய 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டியது. தற்போது அவர் கதாநாயகனாக அறிமுகமாகி, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சசிகுமார், சிம்ரன் நடித்த "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
குறைந்த பொருட்செலவில் உருவாகி அதிகபட்ச லாபம் ஈட்டிய திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்திய திரையுலகில் நடப்பாண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபம் சம்பாதித்த திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி இருக்கிறது.
இந்நிலையில்தான், அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தினை மதன் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் சத்யா எனும் கதாப்பாத்திரத்தில் அபிஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மோனிஷா எனும் கதாப்பாத்திரத்தில் அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், 'புதிய அத்தியாயம் தொடர்கிறது. உங்களின் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.