தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டத்திலும், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் தான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-ல் மேற்கு வங்கத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தது போலவே, நீர்த்துப் போகாமல் போராட்டங்களை மம்தா பானர்ஜி முன்னெடுத்து வருகிறார். மேலும், ”இத்தேர்தல் அதிகாரத்திற்கான போட்டி மட்டுமல்ல; மாறாக, மாநிலத்தை அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் கட்டுப்படுத்த பாஜக மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரான போராட்டம்” எனத் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக டெல்லிக்கு எதிராக தமிழ்நாடு என்ற முழக்கத்தை தொடர்ந்து தனது பரப்புரைகளில் முன்னெடுத்து வருகிறது. அதுபோலவே, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இத்தேர்தல் டெல்லிக்கு மேற்கு வங்கத்துக்குமான மோதல் என தனது பரப்புரைகளில் கூறி வருகிறார். இவ்வாறு, பாஜகவுக்கு எதிரான அரசியலை மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இந்த சூழலில் தான் இன்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், பிரதமர் மோடிக்கு 3 எழுப்பி பேசியிருக்கிறார். 12 ஆண்டுகளாக மோடி பதிலளிக்க மறுக்கும் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ள அவர், ”24 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?: "ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என நீங்கள் உறுதியளித்தீர்கள். உங்கள் அரசு 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ளது. கணக்குப்படி பார்த்தால் இந்நேரம் 24 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வேலைகள் எங்கே?.
இரண்டாவதாக, கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தீர்கள். அதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களைத் துயரத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கினீர்கள். ஆனால், இன்றுவரை உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது ஏன்?.
மூன்றவதாக, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். அந்தப் பணம் எப்போது வரும்? அந்த வாக்குறுதிக்கு நீங்கள் எப்போது பதிலளிக்கப் போகிறீர்கள்?" உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.