மத்தியப் பிரதேசம் மாநிலம் நர்சிங்பூர் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு, 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தியா சவுத்ரி என்ற 19 வயது சிறுமி, ஜூன் 27 அன்று மகப்பேறு வார்டில் உள்ள ஒரு நண்பரின் மைத்துனியைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவர் மீது வெறி கொண்ட நபர் ஒருவர், சந்தியாவை அறைந்து கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தை அறுப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த சம்பவத்தை வேடிக்கை பார்க்கும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பார்வையாளர்கள் எதுவும் செய்யாமல், உறைந்துபோய் நிற்கின்றனர். அதில் சிலர், மருத்துவமனை தரையில் சிறுமி இரத்தம் கசிந்து இறக்கும்போது கடந்து செல்கின்றனர்.
இவை அனைத்தும் பட்டப்பகலில், அவசரசிகிச்சைப் பிரிவுக்குள், மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே சில மீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சுமார் 10 நிமிடங்கள் நீடித்துள்ளது. பின்னர் தாக்குதல் நடத்தியவர் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ள முயன்ற நிலையில், அதில் தோல்வியடைந்து அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார்.
காயத்திற்கு மருந்திடும் இடமாக இருக்க வேண்டிய மருத்துவமனையே ஒரு கொலைக் கூடமாக மாறியிருப்பதான் வேதனையின் உச்சமாக உள்ளது. அதிலும் கொலை நடந்த நேரத்தில், மருத்துவமனைக்கு வெளியே இரண்டு பாதுகாப்பு காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். உள்ளே, ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் வார்டு ஊழியர்கள் உட்பட பல மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர். ஆனாலும், தாக்குதலை யாரும் தடுக்கவில்லை. இதுதான் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்தைப் பார்த்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பாதுகாப்பின்மை காரணமாக 11 நோயாளிகளில் 8 பேர் அப்போதே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், இதுதொடர்பான விசாரணையில் சந்தியாவைக் கொலை செய்தது அபிஷேக் என தெரியவந்துள்ளது. மேலும், சந்தியா கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தியாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக நர்சிங்பூர் எஸ்பி மிருகாகி தேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி, அவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சமூக ஊடக நட்பு மூலம் அவர்கள் பழகியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல், அவர் வேறு யாருடனோ பேசுகிறார். இதனால், அவர் தன்னை ஏமாற்றுகிறார் என நினைத்து, அவளைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.