அன்றாடம் வேலைகளுக்கு மத்தியில் நாம் குடும்பங்களை மறந்து ஓடுவதுண்டு. ஆனால் அதற்கான நேரத்தை இனி அரசே விடுமுறையுடன் வழங்கினால் எப்படி இருக்கும். அப்படியொரு அசத்தலான திட்டத்தைதான் அசாம் மாநில அரசு அமல்படுத்தியிருக்கிறது. நாட்டின் முன்னோடியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள்...
சம்பாதிப்பது எதற்கு?... உணவு மற்றும் குடும்பத்திற்காக... ஆனால் அதையும் மறந்து ஓடுகிறாயே என அன்றாட வேலைகளுக்கு மத்தியில் நம்மை பார்க்கும் பலரும் கேட்டிருக்கலாம். யாரும் கேட்காவிட்டாலும் நமக்கே ஓரிரு முறைகள் தோன்றியிருக்கலாம். கடும் பணிச்சூழலுக்கு மத்தியில் குடும்பத்தை, சாப்பாட்டை மறந்து ஓடுகிறோமே; இந்த வேலையை எதற்காக செய்கிறோம் என்ற மன குழப்பத்திற்கு கூட நாம் சென்றிருக்கலாம். ஆனால் தங்கள் மாநிலத்தின் அரசு ஊழியர்கள் இனி அப்படி உணரக் கூடாது என்பதற்காக அசாம் மாநில அரசு அசத்தலான ஒரு திட்டத்தை களமிறக்கியிருக்கிறது.
மாத்ரி பித்ரி வந்தனா (Matri Pitri Vandana). ஹிமந்த் பிஸ்வ ஷர்மா தலைமையிலான பாஜக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பதவியேற்றபோது தங்களின் முதல் சுதந்திர தின உரையில் முன்மொழிந்த திட்டம்தான் இந்த மாத்ரி பித்ரி வந்தனா. அம்மா, அப்பாவுக்கு வந்தனம் செய்வது என்பதே இதற்கான அர்த்தமாகப் பார்க்கப்படுகிறது. குடும்பத்தின் வேல்யூ, உறவினர்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தி, வலுப்படுத்துவதே இப்படியொரு திட்டம் முன்மொழியப்பட காரணம். இது ஒருபுறம் இருந்தாலும் வயதான பெற்றோரை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும்போது நிச்சயம் அவர்களுக்கான அன்பும், அக்கறையும் குறையும். அதை ஈடுகட்ட ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்து அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர அசாம் மாநில அரசு முயற்சி எடுத்துள்ளது.
அதன்படி அரசு ஊழியர்கள் தங்களின் சாதாரண விடுமுறை நாட்களை இப்படி சிறப்பு விடுமுறையாக அதாவது ஸ்பெஷல் கேஸுவல் லீவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டை பொறுத்தவரை நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மாத்ரி பித்ரி வந்தனா விடுமுறை நாட்கள் விடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் இந்த இரண்டு நாட்களையும் அடுத்து வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து மொத்தமாக 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அனைத்து மாநில அரசு ஊழியர்களும் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் தாய், தந்தை அல்லது மாமனார், மாமியார் இல்லாத ஊழியர்கள் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்த முடியாது. இந்த திட்டத்திற்கான அசாம் மாநில அரசின் பிரத்யேக விண்ணப்ப இணையதளத்தில் ஊழியர்கள் தங்கள் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.
இந்த விடுமுறை தினங்களை சிலர் தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதால் அதற்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தனிப்பட்ட ஓய்வு அல்லது தனிப்பட்ட பணிகளுக்காக இந்த விடுமுறையை பயன்படுத்த கூடாது என மாநில அரசு அறிவித்துள்ளது.