“இனி Soft செங்கோட்டையனை பார்க்க முடியாது” – நேரில் சந்தித்தபின் புகழேந்தி கருத்து!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்திருந்தார். இல்லையெனில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தாம் தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பது இதன்மூலம் உறுதியான நிலையில், அடுத்தக்கட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதேபோன்று, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. தனது பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், அதனை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனநாயக முறைப்படி தனது கருத்தைகேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரித்திருந்தார்.
இத்தகைய நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. செங்கோட்டையனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். அதேபோல், செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்பி சத்தியபாமாவின் பதவியை பறித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக செயற்குழு பொறுப்பு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பு போன்றவைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பெங்களூரு புகழேந்தி நேரில் சந்தித்திருக்கிறார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, “செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பில், எங்குமே அவர் தவறாக பேசவில்லை. எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம்; நமக்குள் தகராறு வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என ஒப்புக்கொண்டார். குற்றமே செய்யாத ஒரு தலைவரை நான்கைந்துபேர் சேர்ந்து கொண்டு பதவிகளில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அது தவறு.
இதனையடுத்து செங்கோட்டையனை நேரடியாக சென்று சந்தித்தேன். எல்லோரும் ஒருங்கிணைய செங்கோட்டையன் விருப்பம் தெரிவிக்கிறார்; ஆசைப்படுகிறார். எல்லோரும் என்று சொன்னால், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அனைவரும் சேர வேண்டிய சூழலுக்கு வந்துவிட்டோம். இனி பழனிசாமியிடம் ஒரு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கும் இடத்திற்கு செங்கோட்டையன் வந்துவிட்டார். இனி செங்கோட்டையனிடம் மிதமான போக்கை எதிர்பார்க்க முடியாது. இனி பல மாற்றங்களை எல்லோரிடத்தில் இருந்தும் எதிர்பார்க்கலாம்.
பழனிசாமி அவர் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். இப்படி மூத்த தலைவரை பொறுப்புகளில் இருந்து நீக்கி எதிரணியில் இருக்கும் எங்களுக்கெல்லாம் பலம் சேர்த்துவிட்டார். அதிமுக எங்களுடையது.. இதில் பழனிசாமிக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் வேலையில்லை என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். இது தொண்டர்களின் இயக்கம்” எனத் தெரிவித்திருக்கிறார்.