ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் தளம்
இந்தியா

அசாம் | 'முஸ்லிம்களை நோக்கிச் சுடும் முதல்வர்' - பாஜக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் சுடுவது போன்றும், அதில் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட நபர்கள் இலக்காக வைக்கப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் சுடுவது போன்றும், அதில் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட நபர்கள் இலக்காக வைக்கப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது.

126 சட்டமன்ற இடங்களைக் கொண்ட அசாமில், இந்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் முடிவில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே மாநிலத்தில் உள்ள மியா முஸ்லிம்களை பாஜக குறிவைத்து வருகிறது. அதேபோல், அசாமில் முஸ்லிம் சமூகங்களை வேறுபடுத்தி முதல்வர் சர்மா கூறிய கருத்துகள் அங்கு அரசியல் பதற்றங்களை அதிகரித்துள்ளது.

ஹிமந்த பிஸ்வா சர்மா

”மியாக்களுக்கு முடிந்தவரை எந்த வழியிலாவது கஷ்டத்தைக் கொடுங்கள். அசாமில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைபெறும்போது நான்கு முதல் ஐந்து லட்சம் மியா வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். மியா மக்களை துன்பப்படுத்துவதே எனது வேலை. எல்லா மாவட்டங்களிலும் மிசிங் (வேறொரு முஸ்லிம் பிரிவு) இருந்திருந்தால், ஒரு மியாகூட எங்கள் நிலத்தை அபகரித்திருக்க முடியாது” என அவர் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு கண்டனமும் எழுந்தது.

இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியால் சுடுவது போன்றும், அதில் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட நபர்கள் இலக்காக வைக்கப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து முதல்வர் சர்மா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு மத்தியில் இவ்வீடியோ வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், இந்த சர்ச்சைக்குரிய ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ "இனப்படுகொலைக்கு அழைப்புவிடுப்பது போல் உள்ளது" என்று காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்,"நீதிமன்றங்களும் பிற நிறுவனங்களும் தூங்குகின்றனவா”எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரத்தில், இது சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் செயல் என திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.