ஹனுமான், அனுராக் தாக்கூர் pt web
இந்தியா

“விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமான்” –முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து

விண்வெளிக்கு முதலில் சென்றது ஹனுமான் என முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் பள்ளி மாணவர்களிடையே சர்ச்சையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

Angeshwar G

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹனுமான் விண்வெளிக்கு முதலில் சென்றவர் என கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இமாச்சல பிரதேச பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில், மாணவர்களின் பதிலுக்கு பதிலளிக்காமல் புராணத்தை வரலாறாகக் கூறியதற்காக அவர் விமர்சிக்கப்படுகிறார். இது அரசியலமைப்பின் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதைக் கொண்டாடும் விதமாக ‘தேசிய விண்வெளி தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், நாட்டின் விண்வெளித்துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும், நாட்டின் விண்வெளித்துறையை புகழ்ந்து பேசியிருந்தார். இந்நிலையில், முன்னாள் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கும் கருத்துதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பிஎம் ஶ்ரீ பள்ளியில் இந்நிகழ்வு தொடர்பான விழா ஒன்று நடைபெற்றது. இமாச்சல பிரதேசம்தான் அனுராக் தாக்கூரின் சொந்த மாநிலம் என்பதால் இவ்விழாவில் அவரும் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் சென்றவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எதிரே அமர்ந்திருந்த மாணவர்களோ ஒன்றுபோல் நீல் ஆம்ஸ்ட்ராங் எனக் கூறினர். ஆனால், இதற்கு அனுராக் தாக்கூர் தெரிவித்த கருத்துதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “ஹனுமனாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்” என அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களே தவறாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத்தின் யூரி காகரின். இவர் 1961ல் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றி வந்தார். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் 1969ல் விண்வெளிக்குச் சென்று நிலவில் நடந்த முதல் மனிதரானார். ஆனால், அனுராக் அதைத் திருத்தாமல் புராணத்தை வரலாறாகச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 51 A (h) அரசு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அனுராக் கூறுகையில், “ஹனுமனாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். இது நமது பாரம்பரியம், அறிவு, கலாசாரம் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எவ்வளவு முக்கியமானவை என்பதை காட்டுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றித் தெரியாமலே, பிரிட்டிஷ்காரர்கள் கற்றுத்தந்தவற்றிலேயே சிக்கிக்கொண்டுவிடுகிறோம். பள்ளி முதல்வருக்கும், எல்லோருக்கும் எனது வேண்டுகோள் – பாடநூல்களுக்கு வெளியே சிந்தியுங்கள். நமது தேசம், நம் பாரம்பரியம், நம் அறிவு ஆகியவற்றைப் பாருங்கள். அந்தக் கோணத்தில் நீங்கள் பார்ப்பீர்களெனில், பார்ப்பதற்கு நிறையவே இருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார். அனுராக் தாக்கூரின் இந்த கருத்துகள் தற்போது அதிகமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.