அமித் ஷா, சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

”அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி இன்னும் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார்” - சித்தராமையா காட்டம்

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு கர்நாடக முதல்வரும் கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

காட்டமாய் விமர்சித்த கர்நாடக முதல்வர்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” எனப் பேசியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ‘ஜெய் பீம்.. ஜெய் பீம்..’ என முழக்கமிட்டனர். இதனால், அவையை நடத்தமுடியாமல், நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தராமையா

அந்த வகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “டாக்டர் அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், நான் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது. கால்நடைகள் மேய்த்திருப்பேன். எங்களின் தலைவர் கார்கே, காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்க முடியாது. கலபுராகி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நீங்கள்கூட உள்துறை அமைச்சர் ஆகியிருக்க முடியாது. ஊரில் காயலான் கடை நடத்தி இருப்பீர்கள். மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

விளக்கம் அளித்த அமித் ஷா

இதற்கிடையே, தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “காங்கிரஸ் உண்மையை திரித்து வெளியிட்டுவருகிறது. அதனைக் கண்டிக்கிறேன். அம்பேத்கரை எதிர்த்து வந்தது காங்கிரஸ்தான். தேர்தல் சமயத்தில் எனது கருத்தை ஏ.ஐ. மூலம் திரித்து வெளியிட்டனர். இன்று எனது கருத்தை திரித்து வெளியிடுகின்றனர்.

அமித் ஷா

னது முழுப் பேச்சையும் ஒளிபரப்ப ஊடகங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். கார்கே என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமாவும்கூட செய்கிறேன். ஆனால், அது அவரின் பிரச்னைகளைத் தீர்க்காது” எனத் தெரிவித்துள்ளார்.