செய்தியாளர் பால வெற்றிவேல்
வட இந்தியாவில் பெருகி வரும் காற்றுமாசுபாடு, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும் பரவி வருவது புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் காரைக்கால் போன்ற கடலோர நகரங்கள், வட இந்தியாவில் இருந்து குளிர்கால காற்றின் மூலம் கொண்டு வரப்படும் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கோதுமை தரிசு நிலங்களை எரிப்பது, தொழிற்சாலைகள் மற்றும் வாகனப்புகை போன்ற மனிதச் செயல்பாடுகளால் வட இந்தியாவின் கங்கைச் சமவெளியில் உருவாகும் PM 2.5 துகள் மாசு, சுமார் 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தென்னிந்தியப் பகுதிகளுக்குக் கடத்தி வரப்படுவது சென்னை ஐஐடி மற்றும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2015 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகால செயற்கைக்கோள் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இது Atmospheric Chemistry and Physics என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வுத் தகவல்படி, டிசம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் வடஇந்தியாவின் காற்று மாசு, எதிர்சுழல் காற்றோட்டத்தால் வங்காள விரிகுடாவை நோக்கி தள்ளப்பட்டு, கடற்கரை நகரங்களை அடைகிறது. இதன் காரணமாக, சென்னையில் வழக்கமான நாட்களை விட 30% முதல் 60% வரை காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த மாசுக்கள் நகரின் வளிமண்டலத்தில் 3 கிலோமீட்டர் உயரம் வரை நிரம்பி, சென்னை நகரின் வெப்பம் 1 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கவும் காரணமாகின்றன.
மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை PM 2.5 துகள்கள். இவை தலைமுடியின் அகலத்தைவிட 30 மடங்கு சிறியதுகள்கள். நுரையீரல் மற்றும் ரத்தநாளங்களில் PM 2.5 துகள்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை கருவில் உள்ள சிசுக்கள் தொடங்கி முதியோர் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே, ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மாசுபாடு ஒட்டுமொத்த தேசத்தையும் அச்சுறுத்துவதால், ஒருங்கிணைந்த காற்று மாசுபாடு குறைப்புத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.