மே 3 நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உறுதியானதைத் தொடர்ந்து, மே 12 அன்று நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்தில், மத்திய கல்வித்துறையின் புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து டெல்லி, புனே, லாத்தூர் உள்ளிட்ட நகரங்களில் சோதனை நடத்தி இதுவரை 13 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
M.மீரா
கடந்த மே 3 ஆம் தேதி, சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகத் தேசிய தேர்வு முகமைக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தது. இந்தத் தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்து சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து வினாத்தாள் கசிந்தது உறுதியானதால் மே 12 அன்று தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதனையடுத்து டெல்லி, புனே மற்றும் லாத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் சிபிஐ நடத்திய அதிரடிச் சோதனையில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
இதனையடுத்து ஜூன் 21 அன்று நடைபெறும் மறுதேர்வு வினாத்தாள்களை அதீத பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படையைப் பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் விமானப்படையை பயன்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகப் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இக்கூட்டத்தில மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் தேர்வு முகமை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு மையப் பாதுகாப்பு வரையிலான ஒட்டுமொத்த தேர்வு முறையையும் மறுஆய்வு செய்த அமைச்சர்கள், தரைவழிப் போக்குவரத்து பாதுகாப்பானது அல்ல என்பதால் ராணுவப் பாதுகாப்பைக் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.