உயிரிழந்த எம் எல் ஏ குர்பிரீத் பாஸி கோகி pt web
இந்தியா

தற்செயலாக சுட்டதில் உயிரிழப்பு.. ஆம் ஆத்மி எல்எல்ஏக்கு நேர்ந்த சோகம்

லூதியானா மேற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பாஸி கோகி தனது சொந்த துப்பாக்கியால் 'தற்செயலாகச் சுட்டதில்' உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் ராஜீவ்

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பாஸி கோகி தனது சொந்த துப்பாக்கியால் 'தற்செயலாகச் சுட்டதில்' உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 12 மணி அளவில் நிகழ்ந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உரிமம் பெற்ற சொந்த துப்பாக்கியால் "தற்செயலாகச் சுட்டதாக" இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டு காயத்துடன் இருந்த அவரை உள்ளூர் தயானந்த் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

குர்பிரீத் பாஸி கோகிக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குர்பிரீத் பாஸி கோகியின் உடல் பிரேத சோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கோகியின் மரணம் குறித்து முதல்வர் பகவந்த் மான் உட்பட பல அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கோகி விதான் சபா சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் மற்றும் ஆம் ஆத்மி எம்பி பல்பீர் சிங் சீச்சேவால் ஆகியோருடன் மாசுபடுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்வது தொடர்பாக ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.

காங்கிரஸில் இருந்து விலகி 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் கோகி. சுமார் 22 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர். 2022 மாநில சட்டமன்றத் தேர்தலில் லூதியானா மேற்கு தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த பாரத் பூஷன் ஆஷுவை தோற்கடித்தார். இவரது மனைவி சுக்செயின் கவுர் கோகி கடந்த மாதம் நடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். குர்பிரீத் பாஸி கோகி 2022 இல் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை லூதியானாவில் நகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றியவர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பஞ்சாப் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.2014 முதல் 2019 வரை லூதியானா மாவட்ட காங்கிரஸ் (நகர்ப்புற) தலைவராக இருந்தார்.

கோகி பாஸியின் மறைவுக்கு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். “குர்ப்ரீத் கோகி பாஸியின் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மக்களுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் சேவை செய்த ஒரு தலைவர், அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இந்த கடினமான நேரத்தில் துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவரது குடும்பத்தினருடன் லூதியானா மக்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அவரது சேவை மரபு எப்போதும் நினைவுகூரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.