பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சியுடன் களமிறங்கும் பிரசாந்த் கிஷோர், பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளின் வாக்குகளைப் பிரித்து ஆட்டக் குலைப்பாளராகத் திகழ்வார் என்று அம்மாநில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
பீகார்... இந்தி பேசும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த பெரிய மாநிலம். அதனாலேயே அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாகஉள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 138 இடங்களும் காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய i-n-d-i-a கூட்டணிக்கு 104 இடங்களும் உள்ளன; 2020 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 37%வாக்குகளையும் i-n-d-i-a கூட்டணி 23% வாக்குகளையும் பெற்றன.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பீகார் முதல்வர் பதவியில் வீற்றிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார். நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதால் நிதிஷின் செல்வாக்கு ஆட்டம் கண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்வோர் பிரச்னை, ஊழல் ஆகியவற்றால் ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. சுஷில் மோடி கடந்த ஆண்டு மறைந்தபின் பாஜகவுக்கு வலுவான மாநிலத் தலைமை அமையவில்லை. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கைகள் மீது கணிசமானோர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு கணக்கெடுப்பின்படி, ஆறில் ஐந்து பேர் இந்த நடவடிக்கையைச் சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் புதிய இளம் தலைவர் தேஜஸ்வி யாதவை கணிசமான வாக்காளர்கள் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கின்றனர். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த லாலு பிரசாத் யாதவ் ஆட்சியின் கொடும் நினைவுகள் மக்கள் மனங்களிலிருந்து முற்றிலும் அகன்றுவிடவில்லை.
மேலும், கடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19இல் மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறையும் 70 தொகுதிகளை கேட்கிறது. தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அங்கீகரிக்கத் தயங்குகிறது. இதுபோல் இரண்டு பிரதான கூட்டணிகளிலும் பல சிக்கல்கள் நிலவுவதால், பீகார் சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய வரவான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தேர்தலில் இரு கூட்டணிகளின் வாக்கு விகிதத்தையும் பிரித்து பெரிய ஆட்டக் குலைப்பு சக்தியாகத் திகழும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் வியூக வகுப்பாளராக பல வெற்றிகளைக் கண்ட பிரசாந்த் கிஷோர் நேரடி அரசியலில் புதுவரவு என்றாலும் படித்தவர், ஊழலையும் வாரிசு அரசியலையும் தீவிரமாக எதிர்ப்பவர் என இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பிராமணரான கிஷோர் பிராமணர்கள், ராஜபுதனர்கள், பூமிஹர்கள் போன்ற முற்பட்ட சமூகங்களின் வாக்குகளை கணிசமாக ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்பட்ட சமூகங்களே பாஜகவின் முதன்மை ஆதரவு தளமாக உள்ளன. பீகாரில் 15.5% பங்கு வகிக்கும் முற்பட்ட சமூகங்களின் வாக்குகள் பிரிவதால் பாஜக கூட்டணிக்கு பாதிப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், வாரிசு அரசியலை விரும்பாதோரும் லாலு ஆட்சியால் அதிருப்தி அடைந்தவர்களும்கூட பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதால் காங்கிரஸ் கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படும். எப்படி ஆயினும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர், இரண்டு பிரதான கூட்டணிகளுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவார் என்றே கள அரசியல் நிலவரம் தெரிவிக்கிறது.