நேத்ரா - சந்திரு
நேத்ரா - சந்திரு  PT WEB
இந்தியா

திருமணத்தை மீறிய உறவு எனக்கூறி தாயை கொலை செய்த தந்தை... அப்பாவை தப்பிக்க வைக்க மகன் செய்த காரியம்!

விமல் ராஜ்

பெங்களூரு அருகே உள்ள முலபாகிலு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரு. இவருடைய மனைவி நேத்ரா. இவர்களுடைய மகன் முலபாகிலு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தற்போது டிப்ளமோ படித்து வருகிறார்.

இந்தநிலையில் கல்லூரியில் பயின்று வரும் அந்த மகன், கடந்த வெள்ளிக்கிழமை தாயுடன் தகராறு செய்துவிட்டு "எனக்கு உணவு வேண்டாம்" எனக் கூறியுள்ளார். பின்னர் மறுநாள் காலை, கல்லூரியில் செல்ல காலை உணவு தயார் செய்து கொடுக்குமாறு தாயிடம் சிறுவன் கூறியதாகத் தெரிகிறது. அப்போது அவனின் தாய் நேத்ரா, "நீ என் மகன் இல்லை. உனக்குச் சாப்பாடு போட மாட்டேன்" எனத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன் இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்துவிட்டார் என சொல்லப்பட்டது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அவரே வாக்குமூலம் கொடுத்து சரணடைந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உயிரிழந்த நேத்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட, இரும்புக்கம்பியை போலீசார், தடய ஆய்வு அறிக்கைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இரும்புக் கம்பியில் இரண்டு பேரின் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்த நேத்ரா

இதையடுத்து உயிரிழந்த நேத்ராவின் கணவர் சந்திருவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நேத்ராவை தான்தான் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நேத்ராவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதில் அவர் கடந்த சில நாட்கள் வீட்டிற்கே வராமல் இருந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட சந்திரு மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நேத்ரா, வீட்டில் சமையல் செய்யாமல் இருந்து வந்துள்ளார். அந்த கோபத்தை மகன் மீது காட்டியுள்ளார்.

சிறுவன்

இந்தநிலையில்தான், கடந்த 2 ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், நேத்ராவை, இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார் சந்திரு. பின்னர் வெளியே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மகனிடம், தாயைக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவன், “இந்த கொலைப் பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன், நான் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்தான் அடைப்பார்கள். அங்கு நன்றாகக் கல்வியும் கற்றுத் தருவார்கள். நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுவித்து விடுவர். அதற்குள் நீ நன்றாகச் சம்பாதித்து வை ப்பா” எனக் கூறியுள்ளான். பின்னர் கொலை செய்யப் பயன்படுத்திய இரும்பு கம்பியை எடுத்துச் சென்று மீண்டும் நேத்ராவை தாக்கி விட்டு, காவல்நிலையத்தில் சிறுவன் சரணடைந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தப்பிச் சென்ற சந்திருவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.