model image Google gemeni
இந்தியா

தரையிறங்கும் நேரத்தில் கோளாறு.. இந்தியாவின் 96 விமானங்களுக்குச் சிக்கல்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு, நாட்டில் போயிங் விமானங்கள் மீது தீவிர கண்காணிப்பு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Prakash J

இந்தியாவில், சில 737 மேக்ஸ் விமானங்களில் உள்ள தானியங்கி விமான வழிகாட்டுதலைப் பாதிக்கும் ஒரு மென்பொருள் கோளாறை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா ஏர் நிறுவனங்களால் இயக்கப்படும் 96 விமானங்கள் பாதிக்கப்படக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு மைல்கல்லாக உள்ளது. அத்துறையச் சார்ந்த பல்வேறு விமான நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தங்களது நிறுவனங்களை இயக்கி வருகின்றன. இந்த நிலையில், 737 MAX ரக விமானங்களில் உள்ள ஒரு மென்பொருள் சிக்கலை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தச் சிக்கல், ஒரு குறிப்பிட்ட தரையிறங்கும் சூழ்நிலையின்போது தானியங்கி விமான வழிகாட்டுதல் செயலிழக்கக் காரணமாகலாம். இதனால், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அதுபோன்ற 96 விமானங்கள் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அதாவது, போயிங் 737 MAX ரக விமானங்களில் முதன்முறை தரையிறக்கம் தவரவிடப்பட்டு, இரண்டாவது முயற்சிக்கு விமானிகள் தங்களின் பாதையையோ அல்லது உயரத்தையோ மாற்றும்போது, தானியங்கி விமான வழிகாட்டுதல் தன்னிச்சையாக விலகும் வாய்ப்புள்ளதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால், இந்தியாவில் போயிங் 737 MAX ரக விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) மற்றும் அகாசா ஏர் (Akasa Air) ஆகிய விமான நிறுவனங்களின் 96 விமானங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Air India

இதில் ஏர் இந்தியா சார்பில் 53 விமானங்களும், அகாசா ஏர் சார்பில் 43 விமானங்களும் அடக்கம். இந்த 96 விமானங்களும் மேற்சொன்ன மென்பொருள் புதுப்பிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இக்கோளாறு விமானத்தைக் கட்டுப்பாடற்றதாக்காது. விமானிகள் உடனடியாகக் கைமுறையாக பாதுகாப்பாக விமானத்தைக் கையாள முடியும். எனினும், தவறவிட்ட லேண்டிங்கிற்குப் பிறகு இந்த அமைப்பை ரீசெட் செய்யுமாறு போயிங் நிறுவனம் விமானிகளுக்கு தற்காலிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 737 MAX நிறுவனங்களுக்கு இதுகுறித்த அவசர வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தர மென்பொருள் புதுப்பிப்பு உருவாக்கப்படுவதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, போயிங் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், இந்த விவகாரத்தால் தங்களது செயல்பாடுகளின் பாதுகாப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், தங்களது 737 மேக்ஸ் ரக விமானங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

akasa air

அதேநேரத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த விவகாரம் குறித்து உடனடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், இந்த விவகாரம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (DGCA) பதில் அளிக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு, நாட்டில் போயிங் விமானங்கள் மீது தீவிர கண்காணிப்பு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.