”போயிங் 787 விமான இன்ஜின் எரிபொருள் ஸ்விட்சுகளில் எந்த பிரச்னையும் இல்லை” - ஏர் இந்தியா
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த விமான விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியது. அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது.
’இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் ஸ்விட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜூலை 21ஆம் தேதிக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அனைத்து விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர் இந்தியா வசம் உள்ள போயிங் 787 விமானங்களில் இன்ஜின் எரிபொருள் ஸ்விட்சுகளில் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் கிட்டத்தட்ட முழு போயிங் 737 மேக்ஸ் விமானக் குழுவும் சரிபார்க்கப்பட்டது. அதில், எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது.