கேரளா- வாக்குச்சாவடி மையம்
கேரளா- வாக்குச்சாவடி மையம் pt web
இந்தியா

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் - கேரளாவில் வாக்குப்பதிவின் போது 8 பேர் உயிரிழப்பு!

Angeshwar G

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர். முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற 102 தொகுதிகளில் 65.5 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.

அதில் கேரளாவில் 70.21 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 8 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததால் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தாமதமானது. அதற்கிடையே கடுமையான வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக பாலக்காடு, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 41.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், காத்திருப்பு இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும், அம்மாவட்டத்தில் ஒட்டப்பாலம் அருகே வாக்களித்துவிட்டு திரும்பிய வாணிவிலாசினியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி மையம்

இதேபோல ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழாவில் 76 வயது முதியவரான சோமராஜன் என்பவர் வாக்களித்துவிட்டு திரும்பிய நிலையில் ஆட்டோவில் ஏறும்போது தடுமாறி விழுந்தார். ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரூர் நிறமருதூர் ஊராட்சியில் உள்ள வல்லிகாஞ்சிரம் எல்பி பள்ளியில் வாக்களிக்கச் சென்ற தட்டாரக்கல் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோல் கோழிக்கோட்டில் வாக்குச்சாவடி முகவர் மற்றும் இரு வாக்காளர்கள், மலப்புரத்தில் வீடு திரும்பிய வாக்காளர் ஒருவரும் உயிரிழந்தனர்.