ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியில், ஒருவரின் மேல் சிகிச்சைக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று இரவு 7.11மணிக்கு ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜார்கண்டின் சத்ரா மாவட்டத்தின் உள்ள சிமாரியா அருகே சென்ற போது இந்த ஏர் ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது, இதையடுத்து இதில், பயணித்த நோயாளி உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விபத்துக்குள்ளான ஏர் ஆம்புலன்சின் விமானி நேற்று இரவு 7.34 மணிக்கு கொல்கத்தா விமான போக்குவரது கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புக் கொண்டு மோசமான வானிலை காரணமாக மாற்று வழியை நாடியதாகவும், பின்னர் தகவல் தொடர்பு மற்றும் ரேடார் தொடர்பை இழந்ததாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன்பிறகே விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், விபத்து பற்றிய தகவல் இரவு 10 மணியளவில் கிடைத்ததாகவும், கடினமான நிலப்பரப்பு மீட்புப் பணியை இன்னும் சவாலானதாக மாற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . அடர்ந்த காட்டின் நடுவில் விமானம் விபத்துக்குள்ளானதால் இரவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும கடினமானதாக இருந்தது . மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்தபோது யாரும் உயிருடன் இல்லை என்றும், விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல சாலை இல்லாததால், கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் உடல்களை நடந்தே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இதற்கிடையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவான, விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (AAIB), விபத்துக்குள்ளான விமானத்தின் RedBird Aviation இன் அலுவலகத்திற்குச் சென்று, பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகள் மற்றும் RedBird இன் செயல்பாடுகள் மற்றும் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பான பிற முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ய விருக்கிறது.