பாடப் புத்தகங்களில் மட்டுமே சாதி பற்றிய பாடங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், நிஜ உலகில் சாதிக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், காதல் என்று சொல்லிவிட்டால் போதும் ஆணவக் கொலைகள் அரங்கேறி அகிலத்தையே அதிரவைக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் சில கிராமங்களில் மக்கள் பழங்கால வழக்கங்களிலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள்.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம், காஷிபூர் தொகுதியில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலின இளைஞரைத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் காரணமாகக் கொண்டு, கிராம மக்கள் அப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சமூகத்தைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். மேலும், இதனைச் சரிசெய்ய வேண்டும் எனில், விலங்கு ஒன்றைப் பலியிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அனைவரும் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, வேறு வழியும் உங்களுக்கு இல்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களும் விலங்கைப் பலியிட்டதுடன், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரும் மொட்டை போட்டுக் கொண்டனர்.
காலாவதியான பழக்கவழக்கங்களை மீறி, தனது திருமணத்தில் சுயாதீனமான முடிவை எடுக்க அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லாதது அம்மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து என்டிடிவியிடம் தொலைபேசியில் பேசிய தொகுதி மேம்பாட்டு அதிகாரி பிஜய் சோய், ”தொகுதி அளவிலான விரிவாக்க அதிகாரி தலைமையிலான குழு இரு குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்தனர். உள்ளூர் பழக்கவழக்கங்களின்படி, இந்தச் சடங்கு எந்த அழுத்தமும் இல்லாமல் தானாக முன்வந்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகளில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு முழு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க மாவட்டத்தில் விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.