ஒடிசா|பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்... பாதிக்கப்பட்ட பெண்களே எரித்து கொன்ற சம்பவம்!
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தநிலையில், எட்டு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 3 ஆம் தேதி இரவு பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் (60) கொலை செய்யப்பட்டிருக்கிறார். இறந்தவர் குய்ஹுரு கிராமத்தைச் சேர்ந்த கம்பி மாலிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த கொடூரமான செயல் ஜூன் 2 ஆம் தேதி கம்பியின் குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தபோது நடந்ததாக கூறப்பட்டிருக்கிறது.
இவர் காணாமல் போய்விட்டதாக கம்பியின் குடும்பத்தினர் மோகனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கி, கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து கம்பியின் பாதி எரிந்த உடலையும், சாம்பல், எலும்பு துண்டுகளையும் மீட்டுள்ளனர்.
முதியவர் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து விசாரனை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியில் வந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த முதியவர் அதற்குப் பின் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அவரால் வன்கொடுமை செய்யப்பட்ட எட்டு பெண்கள் ஒன்றிணைந்து திட்டமிட்டு அவரைக் கொன்றிருப்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண்கள் உதவியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து, மோகனா காவல் நிலையப் பொறுப்பதிகாரி பசந்த் சேதி தெரிவிக்கையில், " சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோதுதான் அந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டது எங்களுக்குத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர் அந்த நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். “ என்று தெரிவித்துள்ளார்.
கஜபதி காவல் கண்காணிப்பாளர் ஜதிந்திர குமார் பாண்டா கூறுகையில், "அந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக எந்தவித புகாரையும் காவல்துறைக்கு அளிக்கவில்லை. அவர்களாவே இதனை செய்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.