ஒடிசா | லஞ்சம் வாங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி.. பொறிவைத்துப் பிடித்த அதிகாரிகள்!
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வில் திரிபுராவின் காஞ்சன்பூரைச் சேர்ந்த திமான் சக்மா இரண்டு முறை வெற்றிபெற்று நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தார். 2019ஆம் ஆண்டு, மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடாவில் உதவி வனப் பாதுகாவலராகச் சேர்ந்த அவர், பின்னர் 2024ஆம் ஆண்டு, அவர் IAS தேர்வில் தேர்ச்சி பெற்று, கலஹண்டியில் உள்ள தர்மகரில் துணை ஆட்சியராகச் சேர்ந்தார். IAS அதிகாரியாக மாறியபிறகு, அவரது சேவையால் பொதுமக்களின் மனங்களை வெகுவாகவே கவர்ந்தார். அவரது சேவைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். அவருடைய செயலும், சேவையும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இதர ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது. ஆனால், இன்று அதே ஐ.ஏ.எஸ். அதிகாரி லஞ்சம் வாங்கியதில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார். திமான் சக்மா தனது பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோதமான பணம் பெற்றதாக ஒடிசா விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் தொழிலதிபர் ஒருவரிடம் அவர் லஞ்சம் கேட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அவரைப் பிடிப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு தரம்கரில் உள்ள அரசு குடியிருப்பில் திமான், தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் லஞ்சமாக பெற்றார். அப்போது தொழிலதிபர் முன்னிலையிலேயே ஐஏஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும்களவுமாகப் பிடித்தனர். அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலத்தில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது அவரது வீட்டில் இருந்த ரூ.47 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் லஞ்சஒழிப்பு துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மேலும் சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடந்துவருவதாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.