Bangaluru blast
Bangaluru blast pt desk
இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது – NIA அதிகாரிகள் விசாரணை

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூர் வைட் பீல்ட் சாலையில் குந்தலஹாலியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த 1 ஆம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் இதையடுத்து 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் குண்டு வைத்து விட்டு, பி.எம்.டி.சி அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவும், துமகூர் வழியாக பெல்லாரி சென்ற வீடியோவும் வெளியானது.

Rameshwaram cafe

இதையடுத்து பெல்லாரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி மினாஜ் சுலைமான் (20), என்பவரை இரண்டு நாட்களுக்கு முன், காவலில் எடுத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்தபடியே பயங்கரவாத செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டது.

அவரது தகவலின்படி, சிறையில் முன்பு அவருடன் இருந்த பெல்லாரியை சேர்ந்த சையத் சமீர் (19), மும்பையைச் சேர்ந்த அனாஸ் இக்பால் ஷேக் (23) டெல்லியைச் சேர்ந்த சயான் ரகுமான் உசேன் (26), ஆகிய மூன்று பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Public

இந்த நான்கு பேரும், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக, 2023 டிசம்பர் 18ல், பெல்லாரியில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் மினாஜ் சுலைமான் தவிர, மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள், நான்கு பேரையும் கூடுதல் விசாரணைக்காக பெல்லாரி அழைத்துச் சென்றுள்ளனர்.