டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
இந்தியா

ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை உத்தரவு| 2 நாளில் 22 மாகாணங்களில் எழுந்த எதிர்ப்பு.. நீதிமன்றத்தில் மனு

பிறப்புரிமை குடியுரிமை நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட உடனேயே, அவரது நிர்வாகத்தினர் மீது 22 மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Prakash J

பிறப்புரிமை குடியுரிமையில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அவற்றுள் மிக முக்கியமானது, பிறப்புரிமை குடியுரிமையும் ஒன்று. அதாவது, குடியுரிமை பெறாத பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் தானியங்கி குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நடவடிக்கையை அவர் கையில் எடுத்துள்ளார். பிறப்புரிமைக் குடியுரிமையின்படி, பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எதுவாக இருந்தாலும், அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் தானாகவே அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த சட்டம் 1868இல் இயற்றப்பட்டது மற்றும் அமெரிக்காவில் பிறந்த அனைத்து நபர்களுக்கும் குடியுரிமை நீட்டிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிராக ஜனநாயக-சார்பு மாநிலங்கள் மற்றும் சிவில் உரிமைக் குழுக்களின் கூட்டணியால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முதல் இரண்டு வழக்குகள் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன், புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் ஆகியவற்றால் தொடுக்கப்பட்டுள்ளன. இதில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தவிர, கொலம்பியா மாவட்டம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரத்துடன் 22 ஜனநாயகக் கட்சி தலைமையிலான மாகாணங்களால் பாஸ்டன் மற்றும் சியாட்டிலில் உள்ள ஃபெடரல் நீதிமன்றங்களில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்கள் அளித்துள்ள மனுவில், “அமெரிக்க மண்ணில் பிறந்த எவருக்கும் தானாக குடியுரிமை வழங்குவதை அகற்ற முயற்சிப்பதன் மூலம் அதிபர் தனது அதிகாரத்தை மீறுகிறார். இதன்மூலம் அமெரிக்க அரசியலமைப்பையும் மீறுகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் கையெழுத்திட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயெ இதுதொடர்பான விவாதம் வேகம் பிடித்துள்ளது.

டொனால்டு ட்ரம்பின் உத்தரவு சொல்வது என்ன?

”ட்ரம்பின் இந்த உத்தரவு, முதன்முறையாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் 1,50,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமைக்கான உரிமையை மறுக்கும். அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்கும் அதிகாரம் அதிபர் ட்ரம்பிற்கு இல்லை” என்று மாசசூசெட்ஸ் அட்டர்னி ஜெனரல் ஆண்ட்ரியா ஜாய் கேம்ப்பெல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1898இல் வோங் கிம் ஆர்க் வி யுனைடெட் ஸ்டேட்ஸ் தீர்ப்பில், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு பிறப்புரிமைக் குடியுரிமை பொருந்தும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதன்படி, ஒருவரின் பெற்றோரின் இனம் அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் அனைத்து உரிமைகளுக்கும் உரிமை உண்டு. இருப்பினும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் நபர்களின் அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை விதி பொருந்துமா என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்பின் உத்தரவில், ’தாய் சட்டவிரோதமாக நாட்டில் இருந்தால் மற்றும் தந்தை குடிமகனாகவோ அல்லது சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவராகவோ இல்லாதிருந்தால், அமெரிக்காவில் பிறந்த தனிநபர்கள் தானியங்கி குடியுரிமைக்கு தகுதியற்றவர்கள். மாணவர் அல்லது சுற்றுலா விசாவில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்’ என அது குறிப்பிடுகிறது.

ட்ரம்பின் உத்தரவை நிறைவேற்ற முடியுமா?

ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி கொள்கை மாறினால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள், பிறப்புரிமைக் குடியுரிமையைப் பெறாவிட்டால், 21 வயதுக்குப் பிறகு, தங்கள் பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்து வர மனு செய்ய முடியாது. அதேபோல், தற்காலிக வேலை விசாவில் இருக்கும் (எச்-1பி விசா போன்றவை) அல்லது கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்க குடியுரிமையைப் பெற மாட்டார்கள்.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவில் இந்திய மாணவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

ட்ரம்ப்

என்றாலும் ட்ரம்பின் இந்தச் செயல்முறையை நிறைவேற்ற ஏராளமான சட்ட தடைகள் உள்ளன. தவிர, அரசியலமைப்பின் விதிகளை மாற்றுவதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது. அமெரிக்க அரசியலமைப்பை திருத்துவதற்கு, ஹவுஸ் மற்றும் செனட் இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை, அதைத் தொடர்ந்து நான்கில் மூன்று பங்கு மாநில சட்டமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதிய செனட்டில், ஜனநாயகக் கட்சியினர் 47 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 53 இடங்களையும் பெற்றுள்ளனர். சபையில், ஜனநாயகக் கட்சியினர் 215 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 220 இடங்களையும் பெற்றுள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் மதிப்பீட்டின்படி, ஜனவரி 2022இல், அமெரிக்காவில் 11 மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆய்வாளர்கள் இப்போது 13 மில்லியனிலிருந்து 14 மில்லியனாக உள்ளனர் என மதிப்பிடுகின்றனர். அமெரிக்காவில் பிறந்த அவர்களின் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக அரசாங்கத்தால் கருதப்படுகிறார்கள்.