”மாவோயிஸ்டுகளுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிட்டது. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸ்டுகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அரசு ’ஆபரேசன் ககர்’ என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, மத்திய அரசு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, ஜார்கண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைய விரும்பும் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் ஒரு தோட்டாவைககூட பயன்படுத்தமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சரணடையும் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சத்தீஸ்கரில் நேற்று மட்டும் 170 மாவோயிஸ்டுகள் சரணடைந்திருந்த நிலையில், இன்று ஒரேநாளில் சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் பகுதியைச் சேர்ந்த 208 மாவோயிஸ்டுகள், ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.
இதையடுத்து, இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும், சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு முழுவீச்சில் செயல்படும் எனவும் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் கூறியுள்ளார்.