"நீதியை வீட்டுக்குள் அடைத்து வைக்கமுடியாது" - ராகுல்காந்தி
உத்தரப் பிரதேசத்தில் ஹரிஓம் வால்மீகியின் கொலை, நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. ராகுல்காந்தி, அவரது குடும்பத்தினரை சந்தித்து, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கிராம மக்களால் தாக்கி கொல்லப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்தார். ஹரிஓம் வால்மீகியின் மரணம் முழு நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ராய்பரேலியில், ஃபதேபூர் எனும் கிராமத்தில் வசிக்கும் ஹரிஓம் வால்மீகி எனும் நபர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இரவு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது உஞ்சஹார்-டால்மாவ் எனும் சாலையில், ஜமுனாபூர் கிராமத்துக்கு அருகில் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது கிராம மக்கள், அவரை திருடன் என சந்தேகித்து சரமாரியாகத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். முன்னதாக, வீடுகளை கொள்ளை சம்பவங்களை நிகழ்த்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற வந்திகளும் பரவியிருக்கிறது.
இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச பாஜக அரசு பட்டியலின சமூக மக்களைக் காக்கத் தவறிவிட்டதாகவும், கும்பல் வன்முறையைத் தடுக்கத் தவறியதாகவும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தற்போதுவரை 14 பேரைக் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக இரண்டு துணை ஆய்வாளர்கள் உட்பட 5 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை சாதி எனும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டாமென அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சந்தித்து உரையாடினார்.. அதோடு உத்தரப் பிரதேச அரசு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை அச்சுறுத்த முயற்சித்ததாகவும், பட்டியலின மக்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராகுல்காந்தி, “ ஹரிஓம் வால்மீகியின் மரணம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்நாட்டில், பட்டியலின சமூகத்தில் பிறந்தது ஒரு கொடிய குற்றமா என்ற கேள்வி வலியுடன் சேர்ந்து அக்குடும்பத்தினரின் கண்களில் இருக்கிறது. உத்தரப் பிரதேச நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்துவதிலேயே மும்முரமாக உள்ளது. அவர்களை என்னைச் சந்திக்க விடாமல் தடுக்கவும் முயன்றது. குற்றவாளிகளை காப்பாற்றி, பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கும் இதே அமைப்பின் தோல்விதான் மீண்டும் வெளிப்படுகிறது. நீதியை வீட்டுக்குள் அடைத்து வைக்க முடியாது. பாஜக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
நான் ஹரிஒம் வால்மீகியின் குடும்பத்துடன் உறுதியாக நிற்கிறேன். நாட்டின் ஒவ்வொரு சுரண்டப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட குடிமகனுடனும் நிற்கிறேன். இந்தப் போராட்டம் ஹரிஓமுக்காக மட்டும் அல்ல — அநீதிக்கெதிராக தலைகுனிய மறுக்கும் ஒவ்வொரு குரலுக்காகவும்” என்று தெரிவித்திருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த அரசின் கீழ் பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறை உச்சத்தை எட்டியுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், NCRBயின் சமீபத்திய தரவுகளின்படி, பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் உத்தரப் பிரதேச மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்