"தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல” - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!
தவெகவின் கரூர் மாவட்ட தேர்தல் பரப்புரையில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ’தவெக தலைவர் விஜயின் பரப்புரையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஓர் அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.election commission answer on tvk party case in madras high court
தொடர்ந்து, ’குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை மும்பை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும், இந்த மாதிரியான சட்ட விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிதுவச் சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது‘ எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறி பெண்கள் மற்றும் குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ள தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் மீது சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே, தேர்தல் ஆணையம் இந்த மனு மீது பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ’தமிழக வெற்றிக் கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்ப முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த மனு தொடர்பாக, இந்த வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என டி.ஜி.பிக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீதுபதிலளிக்க தமிழக அரசுக்கு, காவல்துறை டி.ஜி.பிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.