KSCA pt web
இந்தியா

“எங்கள் பங்கு இல்லையென்றாலும்...” 11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தில் KSCA நிர்வாகிகள் ராஜினாமா

கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அங்கேஷ்வர்

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றதையடுத்து, கர்நாடகத்தில் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும்பாலானவர்கள் குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் கிரண் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோசாலே கைது செய்யப்பட்டதை அடுத்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பதிவு செய்யப்பட்டுள்ள FIR மாநில அரசின் அழுத்தத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இது முட்டாள்தனமான எதிர்வினை என்றும் தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் சோசாலே கைது தொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு சிஐடிக்கும் மாற்றப்பட்டிருந்த நிலையில் சிஐடி அதிகாரிகளும் கர்நாடக கிரிக்கெட் சங்க அலுவகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயத்தில், விசாரணையின்போது அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஆனாலும், நிகில் சோசாலேவிற்கு அத்தகைய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஏ.சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ்.ஜெய்ராம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் A ரகுராம் பட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

அக்கடிதத்தில், “கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக, அதில் எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தபோதிலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளிலிருந்து நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம்” என இருவரும் தங்களது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ராஜினாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றே கர்நாடக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செயலாளர், பொருளாளர் உட்பட பெரும்பாலான கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கின்றனர் என்று ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதோடு, 19 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்ட கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல்கள் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.