விரைவில் புதிய வைரஸ் | எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு எல்லாம் பரவி உயிர்ப்பலி வாங்கியது. இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. பிறகு, தடுப்பூசி வருகைக்குப் பிறகு கொரோனாவின் கோரதாண்டம் குறைய ஆரம்பித்தது. எனினும், ஆங்காங்கே அதன் திரிபுகள் உருவாகிக் கொண்டே இருந்தன. இந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவில்கூட இதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன.
இதுகுறித்த அமெரிக்க ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது. இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.
”HKU5 வைரஸ்கள் அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை. ஆனால், அவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம். இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம். இதனால் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்று வைராலஜிஸ்ட் மற்றும் ஆய்வின் முதன்மை ஆசிரியரான டாக்டர் மைக்கேல் லெட்கோ தெரிவித்துள்ளார்.
கோவிட்-19லிருந்து நாம் கற்றுக்கொண்டது போல, வைரஸ்கள் உலகளவில் பரவ பாஸ்போர்ட் தேவையில்லை என்பதால், ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியமானவை. எச்சரிக்கை அறிகுறிகளை நாம் புறக்கணித்தால், ஒவ்வொரு வைரஸும் மனித உயிர்களை தாக்கும் அபாயம் உள்ளது.