தேசிய குடும்ப சுகாதார அமைப்பு கடந்த 2019 - 2021ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வில், இந்தியாவில் 24 சதவீதப் பெண்களும், 23 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களின் நகரங்களில் வசிப்போரிடம் அடிவயிறு பருமன் அதிகரித்திருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 3 புள்ளி 4 சதவீதம் பேர் உடல் பருமனோடு இருப்பது சுகாதார வல்லுநர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வரும் 2030ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயது வரை உள்ளோரில், 2 கோடியே 70 லட்சம் பேர் உடல் பருமன் கொண்டோராக இருப்பர் என்ற கணிப்பும் அதிர்ச்சியளிக்கிறது. உடல் பருமனில் இருந்து விடுபட வேண்டும் என்ற உந்துதலில், எதையாவது செய்து இளைக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். உடல் பருமனை குறைக்க நீண்ட கால சிகிச்சையும், உணவுப் பழக்கத்தில்
நீடித்த பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களும் தேவை. எந்தவித ஆலோசனையும் இன்றி திடீரென ஜிம்முக்கு சென்று உடலை குறைப்பது உடல்நலத்துக்கு ஆபத்து. அதேபோல அங்கீகாரம் இல்லாத பரிந்துரைகளின்படி இயற்கை முறையில் உடலைக் குறைக்க, கால்நடைகள் போல தாவரங்களை உண்பது அல்லது பெயர் தெரியாத டயட் முறைகளை பின்பற்றுவதும் அபாயமானது.
சயின்ஸ்டெய்லி வெளியிட்டுள்ள இஸ்ரேலிய ஆய்வில், நடுத்தர வயதினர் உடல் எடையை குறைப்பது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. நடுத்தர வயதில் எடைக் குறைப்பில் ஈடுபடும்போது பசியின்மை, உடலின் சக்தியை உபயோகித்தல் மற்றும் இதர செயல்பாடுகளை முறைப்படுத்தும் மூளையின் ஹைப்போதலாமஸில் வீக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமனை குறைக்கும் அதேவேளையில் மூளையின் ஆரோக்கியத்தில் சமரசம் கூடாது என்பது மருத்துவர்கள் எச்சரிக்கையாகும்.