தேசிய தடுப்பூசி தினம்
தேசிய தடுப்பூசி தினம்  முகநூல்
ஹெல்த்

தேசிய தடுப்பூசி தினம் - வரலாறும் முக்கியத்துவமும்!

ஜெனிட்டா ரோஸ்லின்

1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி, இந்தியாவில் போலியோ நோயிலிருந்து குழந்தைகளை காப்பதற்காக, முதல் முதலாக சொட்டு மருந்து செலுத்தப்பட்டது. இதையொட்டி அதன்பின் ஆண்டுதோறும் மார்ச் 16 ஆம் தேதி, தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தடுப்பூசியின் உதவியை கொண்டுதான், காசநோய், போலியோ, பெரியம்மை, கொரோனா போன்ற பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை நம்மால் வெற்றிகொள்ள முடிந்தது.

கொரோனா தடுப்பூசி

அப்படியான தடுப்பூசியின் முக்கியத்துவத்தினை நமக்கு நினைவுப்படுத்தவும், அவற்றின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வரலாறு

இந்திய அரசின் உத்தரவின்படி மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டு, உலக சுகாதார அமைப்பு உலகளவில் போலியோவை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன்பலனாக இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் முதல் டோஸ் வாய்வழி போலியோ தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன்மூலம் 0-5 வயதுடைய குழந்தைகள் பொது சுகாதார மையங்களில் இரண்டு சொட்டு தடுப்பு மருந்துகளை வாய்வழியாகப் பெற்றனர்.

தேசிய தடுப்பூசி தினத்தின் முக்கியத்துவம்

பல்வேறு உயிர்க்கொல்லி வைரஸ்கள், நோய்கள் பரவுவதை தடுப்பதற்கு, தடுப்பூசி உதவும். அந்த தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு தளமாக இத்தினம் இருக்கிறது.

உயிர்க்கொல்லி நோய்களிடமிருந்து உயிர்களை காப்பாற்ற கண்டறியப்பட்ட ஆயுதம்தான் தடுப்பூசி. சமீபத்திய பெருந்தொற்றான கொரோனா காலக்கட்டத்தில் கூட, தடுப்பூசியே ஆயுதமாக இருந்தது.

ஏன் செலுத்த வேண்டும்?

பிறந்த குழந்தைகளுக்கு கூட குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நோயினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தவணைகள் இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி என்பது குழந்தைகளுக்கானது மட்டும் இல்லை. பெரியவர்களுக்கும் பொருந்தும்.

உதராணமாக காய்ச்சல், ஹெபடைடிஸ் போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்க பல வகையான தடுப்பூசிகள் மருத்துவ உலகில் உள்ளன.

மார்ச் 27, 2014 அன்று WHO ஆல் இந்தியா போலியோ இல்லாததாக அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி, 13 ஜனவரி 2023 தினத்தோடு இந்தியா போலியோ இல்லாத 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிதான்.

ஆகவே, “உங்கள் குழந்தையை போலியோவிலிருந்து காப்பாற்ற பிரார்த்தனை செய்யப்போகிறீர்களா? அல்லது தடுப்பூசி போடப்போகிறீர்களா? என்ற கேள்வி வந்தால், அறிவியலை தேர்ந்தெடுங்கள்” என்ற கார்ல் சாகனின் வரிகளை மனதில் கொண்டு போலியோ மட்டுமல்ல பல நோய் ஏற்படாமல் வருமுன் காக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.