அரசின் ‘புற்றுநோய்‌ கண்டறியும்‌ திட்டம்‌’ - தெரியவந்த அதிர்ச்சி தகவல்... மருத்துவர்கள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டம்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3 மாதங்களில் 4,000 பேருக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புற்றுநோய்‌
புற்றுநோய்‌ மாதிரிப்படம் | freepik

புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கட்டமைப்பில் சிறப்பாக இருக்கிறது என்றபோதிலும், முதல் / இரண்டாம் நிலையிலேயே நோயை கண்டறிந்தால்தான் நோயிலிருந்து நோயாளியால் விரைந்து விடுபட முடியும். பெரும்பாலும் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்பட்டு நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

புற்றுநோயை பொறுத்தவரை முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் உள்ள நோயாளிகளை எளிதில் குணப்படுத்தி விடலாம். ஆனால் மூன்று, நான்காம் நிலைகளுக்கு சென்றால், அவர்களை காப்பாற்றுவது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதை கருத்தில்கொண்டு ‘30 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் வருடம் ஒருமுறை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது’ என மருத்துவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்துகின்றனர். இருந்தாலு, மக்கள் அதை முறையாக பின்பற்றுவதில்லை. அதற்கு முக்கிய காரணம், பொருளாதார சிக்கல்கள். புற்றுநோய்க்கான பரிசோதனையை எளிய மக்கள் மேற்கொள்ள சிரமம் இருப்பதால் மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல்களில் முன்னேற்றம் ஏற்படாமல் உள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டு மக்களிடையே புற்றுநோயை விரைந்து முதல்நிலையிலேயே கண்டறியும் நோக்கில் ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 கோடியே 31 கோடி ரூபாய் செலவில் சமுதாய புற்றுநோய் கண்டறியும் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களிலும் உள்ள 1,397 மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புற்றுநோய்‌
ஜெர்மனி - 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய முதியவர்!

இத்திட்டத்தினை ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்துவந்த அப்பரிசோதனைகளின் முடிவில்,

- 1.8 லட்சம் பேருக்கு வாய்ப்புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 1,030 பேருக்கு வாய்ப்புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

- 74,000 பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டதில் 1,485 பேருக்கு மார்பகப் புற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

- 52,000 பெண்களை கர்ப்பவாய் புற்று உள்ளதா என்று பரிசோதித்ததில் 2,800 பெண்களுக்கு கர்ப்பவாய் புற்று அறிகுறி உள்ளது. 

புற்றுநோய் இருக்கும் அதிர்ச்சி தகவல் பலருக்கும் வேதனை கொடுத்துள்ளதுதான் என்பது மறுப்பதற்கில்லை. அதேநேரம் தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் மரணங்களை 70-80 விழுக்காடு குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம். இதன்மூலம் அரசின் இந்த முயற்சி நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்குமென நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com