இந்தியாவில் உடல் எடை குறைப்பு மருந்துகளின் விற்பனை வெறும் 4 மாதங்களில் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற மருந்துகளின் விற்பனை அதிகரிப்பு இந்தியர்களின் உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை... விவரம் என்ன விரிவாக பார்க்கலாம்...
கடந்த ஆண்டு "தி லான்செட்" மருத்துவ இதழில் வெளியான ஒரு உலகளாவிய ஆய்வு, 2022ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 1.25 கோடி இந்திய குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக தெரிவித்திருந்தது. 1990ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில், இந்தியப் பெண்களின் உடல் பருமன் விகிதம் 1.2%லிருந்து 9.8% ஆகவும், ஆண்களின் விகிதம் 0.5% இலிருந்து 5.4% ஆகவும் உயர்ந்துள்ளது.
உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 77 மில்லியன் பேர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 25 மில்லியன் பேர் முன் சர்க்கரை நோயாளர்கள் (Prediabetics) ஆவார்கள். அதாவது, எதிர்காலத்தில் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது.
இந்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்த நிலையில், தற்போது எடை குறைப்பு மருந்துகள் அதிகளவில் விற்பனையாவதும் கவலையை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. ஆம், மௌஞ்சாரோ என்ற எடை குறைப்பு மருந்து இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்தின் விற்பனை நான்கு மாதங்களில் சுமார் 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஃபார்மாட்டிராக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாரத்திற்கு ஒருமுறை ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தை அமெரிக்காவின் எலி லில்லி என்ற மருந்து நிறுவனம் விற்பனை செய்கிறது. டைப்-2 நீரிழிவு நோய் உள்ள பெரியவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் இந்த மௌஞ்சாரோ பயன்படுவதாக தெரிகிறது. இதன் வேதியியல் பெயர் டைர்செபடைடு (Tirzepatide) என்பதாகும். உடலில் உள்ள GIP மற்றும் GLP-1 என்ற இரண்டு ஹார்மோன்களைத் தூண்டி, பசியைக் கட்டுப்படுத்தவும், உணவு உட்கொள்வதைக் குறைக்கவும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் இந்த மௌஞ்சாரோ உதவுகிறது.
ஒரு மாதத்திற்கு தேவையான 4 டோஸ் அதாவது 2.5 மில்லி கிராம் மௌன்ஞ்சாரோ மருந்தின் விலை இந்தியாவில் சுமார் 14,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இந்த மருந்தின் மாதாந்திர விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் ரூ.3 கோடியாக இருந்த நிலையில், ஜூலையில் ரூ.47 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 15 மடங்கு விற்பனை அதிகரித்திருக்கிறது. இன்னும் விரிவாக சொல்லவேண்டுமானால், கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரம் அலகுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், ஜிலையில் 1 லட்சத்து 57 ஆயிரம் அலகுகள் விற்கப்பட்டிருக்கின்றன.
பக்க விளைவுகள் மற்றும் பிற மருத்துவத் தகவல்களைப் பற்றி மருத்துவர் அல்லது நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டுமென்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த மருந்துகள் நன்கு விற்பனையாகும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. காரணம் முன்பே சொன்னதுபோல இந்தியர்களின் உடல் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் இதன் விற்பனை 500 கோடி ரூபாயைக் கடக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. மௌஞ்சாரோ (Tirzepatide) மற்றும் அதன் போட்டியாளரான வெகோவி (Semaglutide) போன்ற மருந்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு இது இந்தியர்களின் எடை அதிகரிப்பு அசுர வளர்ச்சி கண்டு வருவதை காட்டுவதோடு, எடையை குறைப்பதற்கான நெருக்கடியையும், தேவையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இல்லையெனில் வரும் காலங்களில் இதுபோன்ற மருந்துகளின் மிகப்பெரும் சந்தையாக இந்தியா போன்ற நாடுகள் மாறும் அபாயம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.