மருத்துவதுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் மிக முக்கியமான ஒன்று என்றால் அது ஐவிஃப் முறைதான். பல தம்பதிகள் தங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க இந்த ஐவிஃப் முறை பெரிதும் உதவுகின்றன.. ஐவிஃப் எனப்படும் செயற்கைக் கருத்தரித்தல் மையம் சமீபகாலமாக எல்லா இடங்களிலும் வந்துவிட்டது.. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி ஈஸியாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. அப்படி ஐவிஎஃப் (IVF) முறையில், குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்யும் தம்பதிகள், மரபணு சோதனை செய்வது அவசியமாகிறது. காரணம் , கருத்தரிக்கும் கருக்களில் உள்ள மரபணு குறைபாடுகளை கண்டறிந்து, ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்த மரபணு சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறும் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
ஐவிஎஃப் (IVF) என்பது ( "In Vitro Fertilization") என்பதன் சுருக்கமாகும். இது செயற்கைமுறையில் கருவுறுதல் சிகிச்சையாகும், இதில் ஒரு பெண்ணின் கருமுட்டைகளை ஆய்வகத்தில் வைத்து அதை ஆணின் விந்தணுவுடன் இணைக்கப்பட்டு, பின் கருத்தரிக்கப்படுகிறது. இந்த கரு வளர்ந்தவுடன் பெண்ணின் கருப்பையில் பொருத்தப்படுகிறது.
கருத்தரிக்கும் கருக்களில் உள்ள மரபணுக் குறைபாடுகளைக் கண்டறிந்து, ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுக்க இந்த மரபணு சோதனை உதவியாக இருக்கும். பொதுவாக, ஐவிஎஃப் முறையில் கருத்தரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கருக்களை, கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு, மரபணு சோதனைகள் மூலம் பரிசோதிக்கின்றனர். இந்தச் சோதனைகள், கருக்களில் உள்ள குரோமோசோம் அசாதாரணங்கள் அல்லது ஒற்றை மரபணு மாற்றங்கள் போன்ற மரபணுக் கோளாறுகளைக் கண்டறிய உதவுகின்றன. எனவே, ஐவிஎஃப் முறையில் மரபணு சோதனை என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து மெட்ஜெனோமின் முதன்மை மரபணு ஆலோசகர் டாக்டர் ஜி.கே. மாதவிலதா கூறியதாவது:
“ஐவிஎஃப் முறை தம்பதிகளின் வாழ்க்கையை மாற்றித் தன்னம்பிக்கையைத் தருகிறது... வாழ்க்கையை மாற்றும் இந்தத் திறனை நாம் புரிந்துகொண்டதால், ஐவிஎஃப் பயணத்தில் மரபணு சோதனை மற்றும் ஆலோசனையின் முக்கிய பங்கை நாம் புரிந்துகொள்ள முடியும்.”
மேலும், ஐவிஎஃபில் மரபணு சோதனை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களை இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.
“ஐவிஎஃப் முறையில் மரபணு பரிசோதனையை இணைப்பதன் மூலம், ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளைக் கணிசமாக மேம்படுத்த முடியும். மேலும், இது ஆரோக்கியமான கர்ப்பத்தை உருவாக்குவதற்கும் உதவுகிறது. இருப்பினும், மரபணு சோதனை என்பது குழந்தைகளை வடிவமைப்பதற்கான கருவி அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். இது இனப்பெருக்க செயல்திறனை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது” என்றார்.
”ஐவிஃப் முறையில் சிகிச்சை பெறும் போது, சிலருக்கு மரபணுக் குறைபாடுகள் இருக்கக்கூடும். எனவே, அதனைக் கண்டறிந்து ஆரோக்கியமான கருக்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். சிலரிடம் நோயை உண்டாக்கக்கூடிய மரபணுக்கள் இருக்கலாம்; இது முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்பது கர்ப்ப திட்டமிடல் செயல்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று” என்றார்.
" அதனால், ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற விரும்பும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அத்தகைய மரபணுக் குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, கேரியர் ஸ்கிரீனிங் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தம்பதிகள் இருவருமே குறைபாடுகளைக் கொண்டிருந்தால், ஐவிஎஃப் செயல்முறையின்போது, மோனோஜெனிக் கோளாறுகளுக்கான முன்-இம்பிளாண்டேஷன் மரபணு சோதனையை (PGT-M) தேர்வு செய்ய வேண்டும். இதனால், கருக்களில் உள்ள தவறான மரபணுக்கள் தெரிவு செய்யப்படாமல், ஆரோக்கியமான கருக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். கேரியர் ஸ்கிரீனிங் என்பது தம்பதிகளுக்கு ஒரு அறிவார்ந்த தேர்வு ஆகும். இந்த ஸ்கிரீனிங் சோதனை முடிந்த பிறகு கருத்தரிப்பது மிகவும் சிறப்பானது.”
“மேலும், ஐவிஎஃப் முறையில் சிகிச்சை பெறும் போது, இரட்டைக் குழந்தைகள், கருச்சிதைவு, கருவிடம் மாறிய தரித்தல் (ectopic pregnancy) போன்றவை தவிர்க்க முடியாத சில அபாயங்களாக இருக்கலாம். சில நேரங்களில், முட்டைகளை மீட்டெடுக்கும் போது, கருப்பையில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை அனைத்தும் ஐவிஎஃப் சிகிச்சையின் அபாயங்கள் ஆகும்.”
கருச்சிதைவுக்கு குரோமோசோமால் ஏற்படும் அசாதாரணங்கள் ஒரு முக்கிய காரணமாகும். இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்பட்டால், ஐவிஃப் முறையில் செயல்பாட்டில் அனூப்ளோயிடிகளுக்கான முன் பொருத்தல் மரபணு சோதனையை (PGT-A) பயன்படுத்துவது, சரியான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட கருக்களைத் தேர்ந்தெடுக்க உதவும். அதனால் கருச்சிதைவு அபாயத்தைக் குறைக்கலாம், குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அல்லது மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு ஏற்படும் தம்பதிகளுக்கு, இதனால் வெற்றிகரமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்..
1. குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
2. விந்தணு பிரச்சனை உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
3. கருத்தரிக்க இயலாத பெண்களுக்கு இந்த சிகிச்சை உதவியாக இருக்கும்..
4. அதிகமான வயதுடைய பெண்கள் கருதரிக்க திட்டமிட்டால் , இந்த ஐவிஃப் முறை பயனுள்ளதாக அமையும்..
குழந்தையின்மை பிரச்சனை உள்ள தம்பதிகளுக்கு ஐவிஎஃப் சிகிச்சை கருத்தரிக்க உதவும், அதுமட்டுமல்லாமல் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். இது செயற்கை கருத்தரித்தல் முறைகளில் மிகவும் பிரபலமான ஒன்று.
ஐவிஎஃப் சிகிச்சைக்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை
1. ஐவிஎஃப் சிகிச்சை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
2. உங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
3. ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனை மற்றும் மருத்துவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும்.
1. உங்கள் முட்டைகள் முதிர்ச்சியடைந்து கருத்தரிப்பதற்குத் தயாராகும் வகையில் உங்களுக்கு மருந்துகள் வழங்கப்படும்.
2. பின்னர் உங்கள் கருமுட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு, கருத்தரிப்பதற்காக ஆய்வகத்தில் விந்தணுக்களுடன் கலக்கப்படும்.
3. இந்த செயல்முறை மருந்துகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளின் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் தொடங்குகிறது, இதனால் விந்தணு முட்டை கருத்தரிப்பைத் தொடங்குகிறது.
4. அதன் பிறகு முட்டை ஒரு ஜிகோட் நிலையாக மாற உதவுவதற்காக ஆய்வகத்தில் வைத்து கவனிக்கப்படுகிறது. பின்னர் அது கருப்பையில் பொருத்தப்படுகிறது. ஜிகோட் என்பது ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதால் உருவாகும் ஒரு செல் ஆகும்.
5. ஐவிஃப் -ல் வெவ்வேறு படிகள் இருப்பதால், ஒவ்வொரு படிக்கும் நேரமும் பொறுமையும் தேவைப்படுவதால், நீங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.
முதல் முயற்சியிலேயே இது வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்பம் தரிக்க மக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுகள் தேவைப்படுகின்றன. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மலட்டுத்தன்மை பிரச்சினைகள் இருக்கும்போது ஐவிஃப் சிகிச்சை நிச்சயமாக கர்ப்ப வாய்ப்புகளை அதிகரிக்கிறது, ஆனால் ஒவ்வொரு நபரின் உடலும் வித்தியாசமாக இருப்பதால் அது வெற்றியடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று மருத்துவர் கூறுகிறார்.. .
குறிப்பு: ஐவிஎஃப் சிகிச்சை ஒரு சிக்கலான செயல்முறையாகும். எனவே, ஒரு நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.