18-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் அறிகுறிகளற்ற கொழுப்புப் படலம் அதிகரித்து வருவதை புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதய நோய் அறிகுறிகள் இல்லாதவர்களிடையே மேற்கொண்ட ஆய்வில், 13 இளைஞர்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே தொடங்கும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த, 18 வயதிலிருந்தே பரிசோதனைகள் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இளைஞர்களின் ரத்தக் குழாய்களில் அறிகுறிகளற்ற 'அதிரோஸ்கிளிரோசிஸ்' (Atherosclerosis) எனப்படும் கொழுப்புப் படலம் சேர்வது குறித்து 'தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' இதழில் வெளியான புதிய ஆய்வு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டென்மார்க் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த, இதய நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாத 18 முதல் 70 வயதுடைய 16,808 பேரிடம் மேம்பட்ட ஸ்கேனிங் முறைகள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற ஒட்டுமொத்த நபர்களில் 57 புள்ளி 1 சதவீதம் பேருக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில், ஆண்களில் 8 புள்ளி 7 சதவீதம் பேருக்கும், பெண்களில் 6 புள்ளி 7 சதவீதம் பேருக்கும் இந்த கொழுப்புப் படிவு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 13 இளைஞர்களில் ஒருவருக்கு இந்த அறிகுறியற்ற பாதிப்பு உள்ளது.
ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது திடீரென நடப்பதில்லை; இது சிறுவயதிலேயே தொடங்கிப் பல ஆண்டுகள் மெதுவாகத் தொடரும் ஒரு நிகழ்வாகும். கெட்ட கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகையிலை பயன்பாடு, உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்களால் இளமையிலேயே இந்த கொழுப்புப் படிவுகள் சேரத் தொடங்குகின்றன. எனவே, 18 வயது முதலே கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது வருமுன் காக்க உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.