அடிக்கடி சிறுநீர் கழித்தல் | ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட்டிக்., மருத்துவர்கள் தரும் தீர்வு என்ன?
40 வயதைக் கடந்த ஆண்கள் பலருக்கு புரோஸ்டேட் (Prostate) சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைதான் பினைன் புரோஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியா (Benign Prostatic Hyperplasia). இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், முழுமையாக சிறுநீர் வெளியேற்றிய உணர்வு ஏற்படாதது போன்றவை பினைன் புரோஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியாவின் அறிகுறிகள் என்கிறார் மருத்துவர் கு.கணேசன்.
மேலும், புரோஸ்டேட் என்பது ஆண்களுக்கு உள்ள ஒரு பாலியல் சுரப்பியாகும். வயது, பரம்பரைக் காரணிகள், வாழ்க்கை முறை போன்றவை புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைவதற்கான முக்கிய காரணங்கள். இந்தப் பிரச்னை 4 நிலைகளாக இருக்கும். முதல் மூன்று நிலைகள் மாத்திரைகளிலேயே சரியாகிவிடும் என்றும், நான்காம் நிலைக்கு லேசர் சிகிச்சை அல்லது டர்ப் (TURP) அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் மருத்துவர் கு.கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்பிரச்னை உள்ளவர்கள் சிறுநீரை அடக்கிவைத்திருப்பது, அளவுக்கு அதிகமாக டீ காபி குடிப்பது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், மாலை நேரத்துக்குப் பிறகு குறைந்த அளவே தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், காரமான, எண்ணெய்த்தன்மை அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கும்படியும், கேரட், தக்காளி, கீரைகள், பழங்கள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொடர்ந்து, சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் மாற்றம் அல்லது அசௌகரியம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

