HMPV வைரஸ் பரவல் - மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் புதிய தலைமுறை
ஹெல்த்

சீனாவில் அதிகரிக்கும் HMPV வைரஸ் பரவல்; உலகஅளவில் தாக்கம் இருக்குமா? - விரிவாக விளக்கும் மருத்துவர்!

சீனாவில் மனித மெட்டா நியுமோவைரஸ் (HMPV) என்ற தொற்று அதிகரித்து வருவது, உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றால் ஒருவருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? பார்க்கலாம்...

ஜெ.நிவேதா

சீனாவில் மனித மெட்டா நியுமோவைரஸ் (HMPV) என்ற தொற்று அதிகரித்து வருவதாக வெளியாக தகவல், உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றால் ஒருவருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்? கொரோனா போல இது ஆபத்தானதா? இதன் அறிகுறிகள் என்னென்ன? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? யாரெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும்?

நம்முடன் பகிர்கிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவற்றை, இங்கே காணலாம்...

பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கொரோனாவல் வந்த Post Traumatic Stress Disorder!

“2019-ல் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உருவெடுத்து உலகம் முழுவதும் பரவியது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக மாறி உலகை ஆட்டுவித்தது. பல லட்சம் உயிர்கள் இறக்கக் காரணமாகவும் அமைந்தது. அப்போதிருந்து நம் அனைவருக்கும் சீனா என்றாலே ஒருவித பயம் ஏற்படுகிறது. இதை அதிகப்படுத்தும் வகையில், சீனாவில் சுவாசப் பாதை தொற்றுப் பரவல் நிகழும் காணொளிகள் எக்ஸ் தளத்தில் வருடா வருடம் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் பரவும். பிறகு அடங்கும்.

இவையாவும், கொரோனா தொற்று மீது நம் அனைவருக்கும் இருக்கும் போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் (Post Traumatic Stress Disorder) எனப்படும். அதாவது மீண்டும் ஒருமுறை கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், பதற்றம் நமக்குள் வந்துவுட்டது. இதனால் சீனா குறித்து எந்த செய்தி வந்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது. இப்போதும் அப்படியொரு விஷயம் வைரலாகிறது. இது எந்தளவுக்கு உண்மை? புது வைரஸ் பரவலுக்கு காரணம் என்ன? இதன் அறிகுறி என்ன? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்... இதையெல்லாம் பார்க்கலாம்.

HMPV என்றால் என்ன? இதில் எத்தனை வகைகள் - உப வகைகள் உள்ளன?

hmpv virus

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்பதுதான் HMPV என சொல்லப்படுகிறது. இது கொரோனா வைரஸ் போன்று, மனிதர்களுக்குப் புதிய வைரஸ் இல்லை. ஏற்கனவே பல பத்து ஆண்டுகளாக நம்மிடையே இந்த வைரஸ் சுற்றி சுற்றி தொற்றுகளை ஏற்படுத்தி வருகிறது இவ்வகை வைரஸ். அதனால் இந்த வைரஸுக்கு எதிராக, நம்மில் பெரும்பான்மையினருக்கு சிறிய அளவு எதிர்ப்பு சக்தியேனும் இருக்கும்.

முதன்முதல் இந்த வைரஸ் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. கொரோனா போன்றே இதுவும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ்தான். நியூமோ வைரிடே எனும் சுவாசப்பாதையைத் தாக்கும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது இது. தற்போதுவரை இது, ஏ மற்றும் பி என இரண்டு வகைகளாக உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த வகைகளுக்குள் ஏ1, ஏ2, ஏ2பி, ஏ.சி, பி1, பி2 ஆகிய உப வகைகளும் உள்ளன. இவை அனைத்திலுமே, அவைகளிடத்தே இருக்கும் எஃப் ஜீன்களில் சிறிய அளவு உருமாற்றம் இருக்கும்... அவ்வளவுதான்.

இந்தியாவில் ஏற்கெனவே ஏ2பி, பி1 , பி2 , ஏ2சி ஆகிய வகைகள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளன என்பதால் நமக்கும் இந்த வைரஸ் புதிதன்று. இந்த வைரஸ், இந்தியாவில் குளிர்காலங்களில் அதிகம் பரவுவதாக தெரிகிறது. பல்வேறு வகை சுவாசப்பாதை தொற்றுகளான,

  • ஆர் எஸ் வி

  • இன்ஃப்ளூயன்சா வைரஸ்

  • ரைனோ வைரஸ்

  • அடினோ வைரஸ்

  • பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ்

  • கொரோனா வைரஸ்

போல இதுவும் ஒரு தொற்று. மற்றபடி பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய பெரிய பிரச்னைக்குரிய வைரஸ் இல்லை இது.

யாருக்கெல்லாம் இது ஏற்படும் வாய்ப்பு அதிகம்?

இந்த வைரஸ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வீசிங் மற்றும் வலிப்பு உள்ள குழந்தைகளுக்கு அதிகம் இந்தத் தொற்று ஏற்படுகிறது. இவர்களுக்கு நுரையீரலில் தீவிர தொற்று ஏற்படலாம். இதேபோல

  • முதியோர்கள்,

  • புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள்,

  • எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்றவர்கள் (இவர்களிடையே தீவிர தொற்று நிகழும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது)

  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்

  • எதிர்ப்பு சக்தி குன்றியோர்

ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் தொற்று வெளிப்படலாம். மற்றவர்களில் பெரும்பாலானோருக்கு சாதாரண சுவாசப்பாதை தொற்றாகவே கடந்து செல்லும்.

அறிகுறிகள் என்னென்ன?

  • காய்ச்சல்

  • சளி இருமல்

  • மூக்கு ஒழுகுதல்

  • மூக்கடைப்பு

போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே இருக்கும். பின் நோய் குணமடையும் .

அபாய அறிகுறிகள்:

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஏற்கனவே ஹைரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டவர்களுக்கும், நியூமோனியா தீவிரமான நுரையீரல் தொற்று நிலை ஏற்படும். அவர்களுக்கு,

  • மூச்சுத் திணறல்

  • மூச்சு விடுவதில் சிரமம்

  • நடக்கும் போது தலை சுற்றல்

  • உள்ளங்கை பாதம் நீல நிறத்தில் மாறுதல்

  • குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிளுத்து மூச்சு விடுதல்

  • குழந்தை மூச்சு விடும் போது குறட்டை போன்ற சத்தம்

ஆகியவை அபாய அறிகுறிகளாகும்.

ஆய்வுகள் சொல்வதென்ன?

  • சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஐந்து வயதை நிறைவு செய்தோரில் 4% ஹெச்.எம்.பி.வி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தத் தொற்று புதிதன்று.

  • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தபின், ‘வைரஸினால் உண்டான நுரையீரல் தொற்று’க்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகளுள் 8.5% ஹெச்எம்பிவி தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுள் 80% பேருக்கு வீசிங் இருந்தது. 12% பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  • இந்தத் தொற்று ஏனைய சுவாசப்பாதை தொற்றுகள் போலவே இருமுவது, தும்முவது மூலம் சளித்துகள்கள் காற்றில் பறந்து அதை நுகருபவர்களுக்குப் பரவுகிறது. அழுக்கான அசுத்தமான இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்று பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலமும் பரவுகிறது.

  • எனவே, பொதுவாக குளிர் காலங்களில் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுவது நல்லது. கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவுவது நல்லது. கைகளை கண்படும் இடங்களிலெல்லாம் வைக்காமல் இருப்பது இன்னும் நல்லது.

சிகிச்சை என்ன?

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான பிரத்யேக முறிவு மருந்து இல்லாவிடினும் ரிபாவிரின் எனும் வைரஸ் கொல்லி மருந்து சிறப்பாக வேலை செய்கிறது. தீவிரமான அளவு மரணங்களை விளைவிக்கக்கூடியதாக இல்லை என்பதால் இதற்கென பிரத்யேக தடுப்பூசி இதுவரை கண்டறியப்படவில்லை.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த வைரஸ் ஏனைய சுவாசப் பாதை வைரஸ்கள் போன்றே அதன் நோய் தன்மையில் உள்ளது. கொரோனா போன்ற பெருந்தொற்று நிலையை இந்த வைரஸ் உண்டாக்கும் வாய்ப்பு இப்போதைக்கு மிக மிகக் குறைவு. எனவே இந்த வைரஸ் விசித்திரமானது என்றோ பயங்கரமானது என்றோ அச்சம் கொள்ளத் தேவையில்லை.