சீனா| புதிய வைரஸ்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி! சீனா சுகாதார அமைச்சகம் சொல்வதென்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டிருந்தது கொரோனா வைரஸ். கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். இன்றளவும் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறித் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை அன்றாட செய்திகளில் காண முடிகிறது.
இந்நிலையில், சீனாவில் மீண்டும் ஒரு புது வைரஸ் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் காணொளி பதிவுகள் தெரிவிக்கின்றன.
சீனா சுகாதார அமைச்சகம்!
ஆனால், சமூக வலைதளங்களில் வழியாக பரவிவரும் இந்த செய்தி குறித்து சீன சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதர அமைச்சகம் எந்த செய்தியும் வெளியிடவுமில்லை, தொற்றை உறுதி செய்யவுமில்லை.
மேலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றோ அல்லது அவசரநிலையாகவோ உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கவில்லை. எனவே, மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம்.
HMPV வைரஸ்!
மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது பொதுவாக சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும். இதனால், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பாதித்த நோயாளிகள்தான் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவிட்-19 போன்று, HMPVயும் , பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்பல் மூலமாக ஏற்படும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது. வைரஸால் மாசுபட்ட மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது என்று கூறப்படுகிறது.