நாம் செல்ல பிராணிகளாக வளர்க்கும் புறாக்களால் உயிருக்கே வேட்டு வைக்க முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் சமீபகாலமாக புறாக்களால் மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்.. இவற்றில் முக்கியமானது பறவை காய்ச்சல் மற்றும் புறா ஆர்வலர்களுக்கு ஏற்படும் நுரையீரல் போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஆகும். புறாக்களால் பரவும் நோய்த்தொற்றுகள், அவற்றின் எச்சம், இறகுகள் அல்லது அதன் உடலிலிருந்து வரும் துகள்கள் மூலம் பரவலாம். மேலும், புறாக்கள் கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களை அசுத்தமாக்குவதோடு, மனிதர்களுக்கு கடுமையான ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்..
இந்நிலையில் புறா என்றால் நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம்தான். ஆம் அவருடைய இறப்பிற்கு காரணமாக மருத்துவர்கள் புறாவைத்தான் சொன்னார்கள்.. பெங்களூரில் அவர்கள் வாழும் பகுதியில் புறா வளர்க்கப்பட்டு வந்ததாகவும் இந்த புறாக்களின் எச்சத்தின் மீது பட்டு வீசும் காற்றை தொடர்ந்து அவர் சுவாசித்ததன் காரணமாக அவருக்கு புதிய தொற்று பரவி நுரையீரலை அதிக அளவில் பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, புறாக்களின் எச்சத்தில் உள்ள பூஞ்சைகள் மனிதர்களில் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த பாதிப்பு சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்தாக அமையலாம் என கூறினர். இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புனே நகரங்களில், ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா என்ற நுரையீரல் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. அதனால் இனி புறாகளுக்கு உணவளிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.. அப்படியானால் இனி புறா வளர்ப்பதை தவிர்க்க வேண்டுமா?புறாவால் என்ன மாதிரியான தொற்று பாதிப்பு ஏற்படுகிறது? புறாவின் எச்சங்களில் உள்ள பூஞ்சைகளால் என்ன மாதிரியான நோய்கள் வரும்? என இது போன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் நுரையீரல் நிபுணரான மருத்துவர் ஐஸ்வர்யா..
புறா வளர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், உங்கள் வீட்டில் குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு மூச்சு திணறல் இருந்தால், அடிக்கடி சளி காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் அலர்ஜியால் உடல் உபாதைகள் ஏற்படுமேயானால் புறா வளர்ப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது என்கிறார்..
புறாக்களால் ஏற்படும் நோய்தொற்றுகள் என்னென்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், புறாக்கள் மூலம் ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா போன்ற நுரையீரல் பாதிப்புகள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பறவை காய்ச்சல் ஏற்படலாம். இந்த பறவை காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். புறாக்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது. காய்ச்சல், இருமல், தசை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.இது சில நேரங்களில் கடுமையான சுவாசப் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என்கிறார்..
நுரையீரல் ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், பறவை ஆர்வலரின் நுரையீரலில் ஏற்படும் ஒவ்வாமையின் எதிர்வினை புறாக்களின் இறகு, எச்சம் போன்றவற்றின் மூலம் வரும் துகள்களால் ஏற்படுகிறது. இது மூச்சுத் திணறல், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.அது (Hypernemotitis) ஹைப்பர் நிமோடிடிஸ் என்ற பாதிப்பு வரலாம்..
இந்த ஹைப்பர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் என்பது ஒரு வகை நுரையீரல் நோயாகும். இது சில பொருட்களை உள்ளிழுக்கும்போது ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினையால் ஏற்படுகிறது. இந்த பொருட்கள் பாக்டீரியா, பூஞ்சை, விலங்கு புரதங்கள் அல்லது சில இரசாயனங்கள் போன்றவை இருக்கலாம். இந்த பொருட்கள் உள்ளிழுக்கப்படும்போது, நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்டு, நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.இதனால் உயிரே போகும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார் மருத்துவர்..
க்ரிப்டோகாக்கோசிஸ் (Cryptococcosis) என்பது ஒரு பூஞ்சை தொற்றுநோயாகும். புறாக்களின் எச்சத்தில் காணப்படும் பூஞ்சையால் இந்த நோய் பரவுகிறது. நுரையீரல், மூளை போன்ற உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.. அதில் மிக முக்கியமானதாக,
1. சால்மொனெல்லா (Salmonellosis)என்பது ஒரு பாக்டீரியா தொற்று. புறாக்களின் எச்சம் மூலம் பரவுகிறது.வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றார்..
2. ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் (Histoplasmosis) என்பதும் ஒரு பூஞ்சை தொற்று. புறாக்களின் எச்சத்தில் காணப்படும் பூஞ்சையால் பரவுகிறது. இதுவும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்..
3. புறா காய்ச்சல் (Pigeon Fever)என்பது ஒரு பாக்டீரியா தொற்று. பெரும்பாலும் மார்பு அல்லது அடிவயிற்றில் வெளிப்புற புண்கள் ஏற்படுவதோடு, கல்லீரல், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் கூறினார்..
மேலும் பேசியவர், இந்த தொற்றுகள் சிலருக்கு 2 வராத்திலேயே தெரியவரும்.. ஒரு சிலருக்கு 2 முதல் 3 மாதங்களாகும்.. அப்படி தொற்று இருப்பதை அறிந்தவுடன் அவர்களின் நுரையீரலின் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.. அதற்கேற்ப மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்ச்சிக்க முடியும்..அப்படி செய்யும்போது சிலருக்கு சரியாகலாம்.. ஆனால் நுரையீரல் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பின் அவர்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் இயங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.. அது அவர்களுக்கு லைஃப் ரிஸ்க்கைத்தான் கொடுக்கும் என்கிறார்..
நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் தொடர்ந்து வறட்டு இருமல் இருப்பது.. சளி இல்லாமல் இருமல் வந்து கொண்டே இருத்தல், நெஞ்சு பகுதி இருக்கமாக இருப்பது, அதிகமாக மூச்சுத் திணறல் அதாவது பேசினாலே மூச்சு வாங்குவது போன்றவை அறிகுறிகளாகும் என தெரிவித்தார்..
மேலும் இது குறித்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கலாம்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
1. புறாக்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. புறாக்களை தொட்டாலோ அல்லது அதன் அருகில் இருந்தாலோ உடனே கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும் என்றார்..
3. புறாக்களின் எச்சம் அல்லது இறகுகள் போன்றவற்றை கையாளும் போது கையுறைகள் மற்றும் முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
4. புறா கூடுகள் அல்லது புறாக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்..
5. உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்..