சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15-ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்தொன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி என்ன பேசினார் அவர்? அது ஏன் சர்ச்சையானது? காமகோடியின் கருத்துக்கு அறிவியல் ரீதியாக மருத்துவர்கள் சொல்லும் எதிர்ப்பு என்ன? விரிவாக இங்கே அறியலாம்.
ஜனவரி 15-ம் தேதியன்று, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடிய தன்மைக்கொண்டது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” என்றார் காமகோடி.
இதற்கு அடுத்த நாளே அமைச்சர் பொன்முடி, எம்.பி. கார்த்திக் சிதம்பரம் உட்பட பல அரசியல் தலைவர்களும், பல்வேறு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் “இதனை அறிவியல் பூர்வமாக அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி தன் பேச்சுக்கு விளக்கம் அளித்தார் காமகோடி. அந்தவகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்த காமகோடி, “கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அமெரிக்காவில் வெளியான இதழ்களில் கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக குணங்கள் கோமியத்தில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்றைய பொங்கல் விழாவில் இயற்கை விவசாயம், இயற்கை எரிவாயு மற்றும் கோமியம் தொடர்பாக நான் பேசியதில்தான் இந்த விவாதம் எழுந்துள்ளது
இன்றைய தேதியில் அமேசானில் கூட இது தொடர்பான ‘பஞ்சகவ்யா’ என்ற பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அரசியல் தொடர்பாக வரும் விவாதங்கள் பற்றி நான் பதில் அளிக்க விரும்பவில்லை. இது மிகவும் அறிவியல் பூர்வமானது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். கோமியத்தை அருந்தினால் உடல்நல அபாயங்கள் ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி தரவுகள் குறித்து நான் படிக்கவில்லை. இது தொடர்பான விவாதம் எழுந்து உள்ளதை நான் நேர்மறையாக பார்க்கிறேன். இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸில் ஆராய்ச்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும். இந்திய அளவில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வருஷத்தில் எங்களுக்கு பண்டிகை வரும்போது நாங்களும் பஞ்சகவியம் சாப்பிடுகிறோம். நானும் பஞ்சகவியம் சாப்பிடுவேன்” என்றார்.
இதையடுத்து, இவ்விவகாரம் மேலும் விவாதமானது. எக்ஸ் தள பயணர் ஒருவர், “ஐஐடி போன்ற நிறுவன பொறுப்பில் இருப்பவர்கள் பதவியின் மாண்பறிந்து கோமியம் பற்றி இப்படி பேசாமல் தவிர்ப்பது நலம்” என்று குறிப்பிட்டு, சில தரவுகளையும் ஆதாரங்களாக பதிவிட்டிருந்தார்.
திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜும் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை IIT இயக்குனர் காமகோடி அவர்கள் மறுக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ச்சியான இந்த உரையாடல் விவாதமானது. இந்நிலையில் காமகோடியின் கருத்துக்களை இதய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் அமலோற்பவநாதன் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்.
அவரிடம் ‘அறிவியல் ரீதியாக காமகோடியின் கருத்து எந்தளவுக்கு உண்மை?’ என்பதுகுறித்து நாம் பேசினோம். அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை, இங்கே:
“ஆண்டிபயாடிக் என்பது, மாட்டின் சிறுநீரில் அதாவது கோமியத்தில் இருக்கிறது என்கிறார் காமகோடி. முதலில் ஒரு விஷயத்தை நாம் உணரவேண்டும். அதாவது உலகிலுள்ள அனைத்து உயிரினமும் வாழ்வதற்காக உணவு உட்கொள்ளும். அப்படி உட்கொள்கையில், அதன் உடலானது தனக்கு தேவையான சக்திகளை உட்கரித்துக் கொண்டு, மற்றவற்றை (தேவையில்லாதவற்றை) சிறுநீர், மலம், வியர்வை, எச்சில் மூலம் வெளியேற்றும்.
ஒருவேளை மாடு ஆண்டிபயாடிக்கை உட்கொண்டிருந்தாலோ... அல்லது அதன் உடலே அதனை உற்பத்தி செய்தாலோ... மட்டுமே அதன் சிறுநீரில் காமகோடி சொல்வது போல ஆண்டிபயாடிக் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. எந்தவொரு மிருகமும் ஆண்டிபயாடிக்கை உண்பதும் இல்லை, தன் உடலில் உற்பத்தி செய்வதில்லை. பின் எப்படி சிறுநீரில் ஆண்டிபயாடிக் இருக்க முடியும்?
இந்த இடத்தில், ஆண்டிபயாடிக் என்றால் என்ன என்பதில் பெரும்பாலானோருக்கு புரிதல் இல்லை. காமகோடி மற்றும் அவர் கருத்தில் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள், ஆண்டிபயாடிக் என்ற சொல்லை மிகவும் குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார்கள். அவர்களுக்கு புரியும்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரை எடுத்துக்கொள்வோம்... அதில் 100 பாக்டீரியாக்களை நீங்கள் போட்டீர்கள் என்றால், தன்னால் அந்த பாக்டீரியாக்கள் இறந்துவிடும். காரணம், அங்கே osmolality வேறாக இருக்கும்.
தண்ணீருக்கும் சைட்டோபிலாஸத்துக்கும் வேறு வேறு ஆஸ்மோலாலிட்டி இருக்கும். அதனால் பாக்டீரியாக்கள் அழியும். அதற்காக தண்ணீரை ஆண்டிபயாடிக் எனக்கூறிவிட முடியுமா? இதேபோலத்தான் மாட்டின் சிறுநீர் அல்கலைன். மனிதர்களின் சிறுநீர்கூட அல்கலைன்தான். இதில் பாக்டீரியாக்களை போட்டால், அது இறந்துவிடும்தான். இதற்காகலாம் அதை மருத்துவ குணம் கொண்ட ஆண்டிபயாடிக் என்று கூறிவிட முடியாது.
இன்னும் சொல்லப்போனால், நம் வீட்டின் அருகிலுள்ள சாக்கடையில் கூட ஏதோவொரு ஆண்டிபயாடிக்கின் மிச்சமீதி இருக்கும். ஆக சிறுநீர் என்பது சிறுநீர். ஆண்டிபயாடிக் என்பது ஆண்டிபயாடிக். இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.
நீங்கள் உணவு வழியாக உட்கொண்டு, அது செரிமானமாகி... அது உடலில் குறிப்பிட்ட நோய் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது என்றால், அதுதான் மருத்துவ குணம் கொண்ட ஆண்டிபயாடிக். இதை நிரூபிக்க 4 நிலை சோதனை தேவைப்படுகிறது. ஆய்வகம் தொடங்கி விலங்குகள், பின் மனிதர்கள் என அந்த சோதனை இருக்க வேண்டும். நான்காவது நிலையில், அந்த சோதனையானது ‘இந்த ஆண்டிபயாடிக்கால் ஏதாவது நீண்ட கால பக்கவிளைவுகள் இருக்குமா’ என்பது இருக்க வேண்டும். நான்காவது நிலை சோதனை, நீண்ட கால சோதனையாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மக்களுக்கு மருத்துவ பொருளாக அதை பரிந்துரைக்க முடியும் / வேண்டும்.
இன்றைய தேதியில் உலகில் 10,000க்கும் மேற்பட்ட கிருமிகள் நம்மை சுற்றி உள்ளன. இவற்றையெல்லாம் வைத்து லேப் செட்டப்பில் ஆய்வு செய்யும்போது, அவற்றின்மேல் சிறுநீரை வைத்தால் (மனிதர்கள் / விலங்குகள் என யாருடைய சிறுநீர் என்றாலும்), கிருமியின்/ பாக்டீரியா செத்துவிடும்தான். ஆனால் இதனால் மட்டுமே அதை மருத்துவ குணம் கொண்ட / நோயை விரட்டும் ஆண்டிபயாடிக் மருந்தாக மக்களுக்கு கொடுக்கலாம் என்றில்லை. மேலே நான் சொன்ன osmolality-தான் இதற்கு காரணம்.
மட்டுமன்றி, இது ஆய்வக அளவீடு மட்டுமே. இதற்குப்பின் இதை விலங்குகள் மத்தியில் மதிப்பிட வேண்டும். தொடர்ந்து அதிலும் பாக்டீரியா அழிந்தால், மனிதர்களுக்கு நீங்கள் சோதிக்க வேண்டும். குறிப்பாக எவ்வளவு மில்லி கிராம் குடித்தால் மக்கள் நோய்த்தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதற்காகத்தான் 4 கட்ட பரிசோதனை நிலைகள் என்ற வழிமுறை மருத்துவ உலகில் உள்ளது.
இன்னொரு விஷயமும் சொல்கிறேன். எந்தவொரு ஆன்டிபயாடிக்குமே, அனைத்து கிருமிகளுக்கும் எதிராக வேலை செய்வதில்லை. உதாரணத்துக்கு பெனிசிலின் தொடங்கி இப்போதுள்ள லேட்டஸ்ட் ஆன்டிபயாட்டிக் வரை பல ஆண்டிபயாடிக்ஸ் நம்மை சுற்றி உள்ளன. இதில்
எந்தவகை ஆன்டிபயாடிக், கோமியத்தில் இருக்கிறதென யாருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அது எந்த பாக்டீரியாவை கொல்கிறது என இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அப்படியே அதை கண்டறிந்தாலும், எந்த அளவு (மி.லிட்டர் அல்லது மி.கிராம் என்ற அளவீட்டில்) எடுத்துக்கொண்டால் குறிப்பிட்ட பாக்டீரியா மனித உடலில் சாகிறது என்று நிரூபிக்கப்படவில்லை.
இது எதையுமே கண்டறியாமல், மொட்டையாக கோமியம் ஒரு ஆண்டிபயாடிக் - அது காய்ச்சலுக்கு எதிராக செயல்படுகிறது என்று சொல்வது தவறு.
நாய் பூனை போன்ற நிறைய மிருகங்கள், தங்கள் புண்களை தங்கள் எச்சில் வழியாகவே சரிசெய்து கொள்கின்றன. அதற்காக, அந்த எச்சிலை மனிதர்களுக்கு ‘மருத்துவ குணம் கொண்டது’ என பரிந்துரைக்க முடியுமா? அது பொருந்துமா? இதையெல்லாம் காமகோடி ஏற்பாரா? ஒருவேளை அவர் கோமியம் குடிப்பார் என்றால் அதை அவருடனேயே வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவெளியில், பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு ஆதாரமின்றி பேசுவது தவறு.
Patent வாங்கப்பட்டிருப்பதாக சொல்கிறார் காமகோடி. Patent வாங்கி வைப்பதால் மட்டுமே, ஒரு பொருள் மருத்துவ குணம் கொண்டது என்று கிடையாது. அது ‘நான் ஒரு ஆய்வு செய்துள்ளேன்’ என்பதற்காகதான் Patent செய்யப்படுகிறது. அது ‘நிரூபிக்கப்பட்டதா, அதுவும் முழுமை பெற்றதா’ என்பதுதான் விஷயம்.
சிலர் ‘அவர் இஷ்டம், வேண்டாமென்றால் விட்டுவிடுங்கள்’ என சொல்கின்றனர். அப்படியெல்லாம் மருத்துவ விஷயத்தில் யாரும் இஷ்டத்திற்கு எதையும் சொல்ல முடியாது. ‘வீட்டுப்பிரசவமே சிறந்தது’ என யாராவது சொல்ல முடியுமா? இஷ்டமிருந்தால் வீட்டுப்பிரசவம் செய்யுங்கள் என்று சொன்னால் காவல்துறையே கைது செய்யும்.
காமகோடி தன் பேட்டியில் ‘என் அப்பாவிடம் ஒரு மகரிஷி சொன்னார்; நான் அதை கேள்விப்பட்டேன்’ என்கிறார். ஒரு விஞ்ஞானியின் வாதம் இப்படியா இருக்கும்? இப்படி ஒவ்வொருவரும் ‘நான் கேட்டது’ எனக்கூறினால், என்ன ஆகும்? ஒருவேளை அவர் கேள்விப்பட்ட பின், அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதை கண்டறிய ஆய்வுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால்கூட நாம் அதை வரவேற்கலாம்... அதைவிடுத்து ‘இடப்புறம் படுத்தால் பெண் குழந்தை பிறக்கும், வலப்புறம் படுத்தால் ஆண் குழந்தை பிறக்கும்’ ‘சித்தரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டால் ஆஸ்துமா சரியாகும்’ என்பவர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?” என்றார் அழுத்தமாக.