“அவரும் ஆளுநரை போல மாறிவிட்டார்..” ஐஐடி இயக்குநர் காமகோடியை விமர்சித்த அமைச்சர் பொன்முடி!
சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என கூறினார். அவரது இந்த பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், போலி அறிவியலை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஐஐடி இயக்குநர், தான் இருக்கும் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றவர் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அறிவியலுக்கு புறம்பான கருத்தைப் பேசிய ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடிக்கு “தனது பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். இல்லையென்றால், அறிவியல்படி தவறு என்று பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் அமைச்சர் பொன்முடியும் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடிக்கு தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
விமர்சித்த அமைச்சர் பொன்முடி..
விழுப்புரம் அருகே இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்காக கட்டப்பட்டுள்ள மணி மண்டபப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி, அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஐ.ஐ.டி தலைவர் காமகோடி கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, ”ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்லூரியினுடைய இயக்குநர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது. பசுமாட்டு கோமியத்தை முதலில் அவர் குடிக்க வேண்டும், அவர் அதைத்தான் குடித்துக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன், அதனால்தான் அவர் இப்படியெல்லாம் பேசிவருகிறார்.
மாட்டு கோமியம் உடம்புக்கு கெடுதியானது என ஏற்கனவே அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்ட நிலையில், அறிவியல் ரீதியான ஒரு பல்கலைக்கழகத்தில் இயக்குநராக இருந்து கொண்டு இப்படி சொல்லியிருப்பது எந்த அடிப்படையில், ஏன் இப்படி சொல்கிறார் என புரியவில்லை.
மக்கள் இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரும் ஆளுநரை போல மாறிவிட்டார் போல தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் இப்படி எல்லாம் பேசி வருகிறார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். குறிப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் அறிவியல் ரீதியாக சிந்திக்ககூடிய, பகுத்தறிவு சிந்தனை உடையவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை” என தெரிவித்தார்.