”கோமியம் ஒரு அமிர்த நீர்; 80 வகையான நோய்களுக்கு மருந்து; ஏன் அவர் சொல்றத கேட்க மாட்றீங்க” - தமிழிசை
சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என கூறியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
அவரின் கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கோமியம் மருந்தாக செயல்படுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் இருப்பதாக காமகோடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாட்டு கோமியத்தில் மருத்துவக்குணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அலோபதி மருத்துவரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
80 வகையான நோய்களை கோமியம் கட்டுப்படுத்துகிறது..
மாட்டு கோமியம் குறித்து ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, அதை அலோபதி மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் எப்படி பார்க்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “ஒருங்கிணைந்த மருத்துவத்தை நான் ஆதரிக்க கூடியவர், பிரசவத்தில் கூட யோகாவை செய்துவிட்டு சுக பிரசவமாக மாற்றுவதை நாங்கள் அலோபதியில் செய்துவருகிறோம். அதை நாங்கள் சார்பு மருத்துவம் என சொல்கிறோம். அதாவது சித்தா, ஆயுர்வேத, இயற்கை மற்றும் ஆங்கில மருத்துவம் ஒருங்கிணைந்ததை சார்பு மருத்துவம் என்கிறோம். இதில் நான் பயிற்சியும் பெற்றுள்ளேன்.
அதன்படி ஒருங்கிணைந்த மருத்துவத்தின்படி கோமியத்தை அமிர்த நீர் என்று சொல்வார்கள், அதற்கு உயிர்நீர் என்று அர்த்தம். அது 80 வகையான நோய்களை கட்டுப்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். நாம் இஞ்சி, சுக்கு போன்றவற்றை வீட்டிலேயே சாப்பிடுகிறோம், அதற்கெல்லாம் அறிவியல்பூர்வமான ஆதாரம் என்று எதுவும் இல்லை, ஆனால் சுப்பிரமணியனுக்கு மேலானது சுக்கு என்று மதிப்பிடப்படுகிறது.
எப்படி சுக்கு என்பது சுப்பிரமணியனுக்கு மேல என்று சித்தாவில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதேபோல மாட்டு கோமியம் நோய்களை கட்டுப்படுத்துகிறது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கோமியத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள்” என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: “வகுப்பறையில் சென்று ‘நீங்க குடிங்க’ன்னு சொல்லவில்லையே..” ஐஐடி இயக்குநர் கருத்து பற்றி அண்ணாமலை!
மேலும் ”கற்றரிந்த ஒருவர் கோமியத்தை பற்றி கூறும்போது, அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்று ஏன் யாரும் யோசிக்க மறுக்கிறீர்கள், மாறாக அவரை வேலையை விட்டு அகற்றுங்கள் என்று கூறுவது தவறான ஒன்று. அறவியலுக்கு புறம்பான கருத்து என்று யார் சொல்கிறார்கள், மாட்டு சாணத்தை வீட்டிற்கு முன் முழுகும் பழக்கம் இன்னும் நம் வழக்கத்தில் இருக்கிறது, ஏனென்றால் அது கிருமிநாசினி என்று சொல்லப்படுகிறது.
அதேபோல கோமியத்தை கிரகப்பிரவேசத்தின் போது தெளிக்கும் பழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது. அதில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதால் தானே அதை இன்றளவும் பின்பற்றுகிறோம். சாமியே இல்லை என்பவர்கள் பின்னர் கோவிலுக்கு செல்வதை போல, தற்போது கோமியத்தை விமர்சிப்பவர்கள் கூட நாளை கோமியம் குடிக்கக் கூட செய்யலாம்” என்று பேசியுள்ளார்.